Breaking
Wed. Jan 1st, 2025

-அபூ செய்னப் –

மூத்த அரசியல்வாதி அலவி மௌலானா அவர்களது மரணச்செய்தியானது மிகுந்த கவலையையும்,மன வேதனையையும் உண்டு பண்ணியுள்ளது. அவர் நிரப்ப முடியாத அரசியல் வெற்றிடமாகும். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிஊன். அவரது இழப்பு இலங்கை முஸ்லிம் அரசியலுக்கு பேரிழப்பாகும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். அஷ்ஷெய்க் அலவி மெளலானா அவர்களின் மரணச்செய்தியை கேள்வியுற்றதும் பிரதியமைச்சர் வழங்கிய இரங்கல் செய்தியில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கூறுகையில், இலங்கையின் மூத்த அரசியல்வாதியும், அரசியல் அனுபவம் மிக்கவருமான மர்ஹூம் அலவி மெளலானா சுதந்திரக்கட்சியின் முக்கிய ஆளுமைகளில் முன்னணியில் திகழ்ந்தவர். சுதந்திரக் கட்சி முஸ்லிம் பிரிவின் முக்கியஸ்தராக செயற்பட்ட இவர் கொழும்பு மாநகர சபை உறுப்பினராக பதவி வகித்தார்.

மக்களோடு மென்மையாகவும், இனிமையாகவும் பழகுகின்ற இவரை அதிகமான சிங்கள சகோதரர்கள் நேசித்தார்கள். இவரது சேவைகளும் இன,மத பேதங்களைக்கடந்ததாகவே இருந்தது. எப்போதும் புன்னகை தவழும் முகத்துடன் இருக்கும் அவர் ஒரு அரசியல் முதுசம் எனக்கொள்ள முடியும்.

இலங்கையின் மூத்த தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவராக முன் நின்று செயற்பட்டார். பல தடவைகள் அமைச்சுப்பதவிகளை அலங்கரித்து இன,மத பேதங்களைக்கடந்து மனிதபிமானத்துடன் சேவையாற்றினார்.மேல் மாகாண ஆளுனராக இரண்டு தடவைகள் பதவி வகித்த இவர் ஆன்மீகத்திலும் அதிக ஈடுபாடு உடையவராவார்

அண்மையில் சுகவீனமுற்றிருந்த நிலையில் கொழும்பு தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த அலவி மௌலானா, சிகிச்சை பலனின்றி இறைவனடியெய்தினார். அன்னாரின் இழப்பில் துயரம் அடைந்துள்ள அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை, தெரிவித்துக்கொள்வதோடு அன்னாரின் மறுமை வாழ்வை ஈடேற்றமுள்ளதாக எல்லாம் வல்ல இறைவன் ஆக்குவானாக என பிரார்த்தனை செய்கிறேன். எனக் கூறினார்.

By

Related Post