ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கருப்பின மாணவர்கள் அவமதிக்கப்பட்ட வீடியோ பேஸ்புக்கில் வைரலானதையடுத்து ஆப்பிள் நிறுவனம் அச்சிறுவர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள மேரிபைர்னாங் பகுதியில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் கடை ஒன்றிற்கு ஆப்பிரிக்காவை சேர்ந்த கருப்பின மாணவர்கள் 6 பேர் கடந்த செவ்வாய் அன்று சென்றுள்ளனர்.
அப்போது, கருப்பின மாணவர்களை நிறுவனத்தின் ஊழியர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஏன் என்று கேட்டதற்கு “நீங்கள் உள்ளே இருந்தால், மற்றவர்களுக்கு நீங்கள் ஏதாவது திருடிவிடுவீர்களோ என்ற அச்சம் இருக்கும்” என்று ஊழியர்கள் கூறியுள்ளனர்.
இதனையடுத்து இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. பின்னர் கருப்பின மாணவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த கருப்பின மாணவர்களில் ஒருவர், “ஹைபாய்ட் பகுதிக்கு நீண்ட காலமாக நான் வந்து செல்கிறேன். ஆனால் இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று நான் நினைத்ததில்லை. நான் மிகவும் அவமதிக்கப்பட்டுள்ளேன்” என்று கூறினார்.
இந்த சம்பவத்தை வீடியோ எடுத்த கருப்பின மாணவர்களில் ஒருவர் இதனை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை லட்சக்காணோர் பார்வையிட்டனர். இதையடுத்து, அந்த வீடியோ காட்டுத் தீபோல் இணையதளத்தில் பரவி, கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் தங்களது விற்பனையகத்திலிருந்து 6 கருப்பின இளைஞர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியதற்கு ஆப்பிள் நிறுவனம் மன்னிப்பு கேட்டது.
நிறவெறி காரணமாகவே இந்தச் செயலில் ஆப்பிள் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர் எனக் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், ஆப்பிள் நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள அறிகையில், சர்ச்சைக்குள்ளான வீடியோவில் இடம்பெற்ற 6 இளைஞர்களும் மீண்டும் குறிப்பிட்ட அந்த விற்பனையகத்துக்கு புதன்கிழமை வந்ததாகவும், அவர்களிடம் விற்பனையக மேலாளர் மன்னிப்பு கோரியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.