Breaking
Mon. Dec 23rd, 2024

ரியோ ஒலிம்பிக் போட்டி நிறைவடைந்தது. பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதலிடம் பிடித்தது.

உலகின் மிகப்பெரிய விளையாட்டான 31–வது ஒலிம்பிக் போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் கடந்த 5–ந் திகதி கோலாகலமாக தொடங்கியது.

தென்அமெரிக்க கண்டத்தில் நடந்த முதல் ஒலிம்பிக்கான இதில் 206 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் படையெடுத்தனர். 17 நாட்கள் நடந்தேறிய இந்த ஒலிம்பிக் திருவிழா கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு பெற்றது.

ரியோ ஒலிம்பிக்கில் முதல் நாளில் இருந்தே பதக்க வேட்டையாடிய அமெரிக்கா எதிர்பார்த்தது போலவே பதக்கப்பட்டியலில் ‘செஞ்சுரி’ அடித்து முதலிடத்தை பிடித்து இருக்கிறது. அந்த நாடு 46 தங்கம், 37 வெள்ளி, 38 வெண்கலம் என்று மொத்தம் 121 பதக்கத்துடன் ‘நம்பர் ஒன்’ அந்தஸ்தை எட்டியது.

இந்த முறை சீனாவை பின்னுக்கு தள்ளிய இங்கிலாந்து 27 தங்கம், 23 வெள்ளி, 17 வெண்கலம் என்று 67 பதக்கத்துடன் இங்கிலாந்து 2–வது இடத்தை பிடித்தது. 1908–ம் ஆண்டு ஒலிம்பிக்கில் இங்கிலாந்து முதலிடத்தை பெற்றிருந்தது. அதன் பிறகு ஒலிம்பிக்கில் இங்கிலாந்தின் சிறந்த செயல்பாடாக இது அமைந்துள்ளது. சீனா 26 தங்கம் உள்பட 70 தங்கத்துடன் 3–வது இடத்தை பெற்றது.

இந்தியா சார்பில் 118 வீரர், வீராங்கனைகள் ரியோ ஒலிம்பிக்குக்கு அனுப்பப்பட்டனர். ஒலிம்பிக்கில் இந்தியாவில் இருந்து 100–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது இதுவே முதல் முறையாகும். முதல் 11 நாட்களில் சோகமே மிஞ்சிய நிலையில் கடைசியில் மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கலமும், பேட்மிண்டன் ‘புயல்‘ பி.வி.சிந்து வெள்ளிப்பதக்கமும் கைப்பற்றி மானத்தை காப்பாற்றினர்.

அடுத்த ஒலிம்பிக் போட்டி 2020–ம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கிறது.

ஒலிம்பிக் நிறைவு விழாவில் அடுத்த ஒலிம்பிக் நடைபெறவுள்ள ஜப்பான் நாட்டின் கலாச்சாரத்தை குறிக்கும் கண்கவர் கலை நிகழ்சிகளும், ஒலிம்பிக் பிறந்த கிரீஸ் நாட்டை கௌரவிக்கும் வகையிலான நிகழ்சிகளும் நடைப்பெற்றது.

தொடர்ந்து, ஒலிம்பிக் கொடியை ரியோ டி ஜெனிரோ நகர மேயர் எடூரோ பயஸ் இறக்கி, டோக்கியோ நகர ஆளுநர் யூரிகோ கொய்கோவிடம் ஒப்படைத்தார். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாஷ் போட்டிகளை நிறைவு செய்து வைத்தார். இறுதியாக ஒலிம்பிக் ஜோதி முறைப்படி அணைக்கப்பட்டது.

By

Related Post