இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஜனாதிபதியினால் நீக்க முடியாது. அந்த அதிகாரம் பாராளுமன்றத்திற்கே இருப்பதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பு திருத்தம் ஒன்றிற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாகவும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்கக் கோருவோர் அதனை பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு முன்வைக்க வருமாறு அழைப்பு விடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பிலுள்ள சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்குமாறு எழுப்பப்படும் கோஷம் வெறும் அரசியல் இலாபம் பெறுவதற்காகனது. ஜனாதிபதி முறை ஒழிப்பு, அதிகாரப் பகிர்வு, 13வது திருத்தச் சட்டம் அடங்கலான சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கு பாராளுமன்றத் தெரிவுக்குழுவே உகந்த இடம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.