Breaking
Mon. Dec 23rd, 2024

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் வலுவேறாக்கத்தில் அதிகாரச் சமநிலையை (balance of power) ஏற்படுத்தி உள்ளதால் சமூகப் பிரதிநிதித்துவங்களை அதிகரிப்பதே பொருத்தமாக இருக்கும். இதற்கான கணிப்பீடுகளையே முஸ்லிம் தலைமைகளும், முஸ்லிம் அரசியல்வாதிகளும் ஆராய வேண்டி உள்ளது. எனவே, பெரும்பான்மை தேசிய கட்சிகளில் தற்போதுள்ளதைப் போன்று முஸ்லிம் தலைமைகளும் அரசியல்வாதிகளும் பிரிந்திருப்பதுடன், எம்.பிக்களைப் பெறக் கூடிய வேறு கட்சிகளுடன் அரசியல் செய்வது குறித்தும், முஸ்லிம் அரசியல்வாதிகள் சிந்திப்பதே 19 ஆவது திருத்தம் நடைமுறையில் இருக்கும் வரை பொருத்தமானது. காலமாற்றத்துக்குள் நுழைந்த புதிய அரசியல் சித்தாந்தமாகவும் இதைக் கருதலாம்.

விகிதாசாரத் தேர்தலின் விந்தைகளைப் பயன்படுத்தி பிரதிநிதித்துவங்களை அதிகரிப்பதற்குள்ள சிறந்த தெரிவும் இதுவே. ஏனெனில் நாட்டிலுள்ள முஸ்லிம்கள் ஒரு தனிக்கட்சியில் மட்டுமே இருபார்களேயானால், கடந்த தேர்தலில் 21 முஸ்லிம் எம்.பிக்களைப் பெற்றிருக்க இயலாது. இதையே கடந்த கால தேர்தல் களக்காட்சிகள் காட்டுகின்றன. கட்சிகள் ஒன்றித்து செயற்படுவதால் சமூகப் பலத்தை அதிகரிக்க முடிகின்ற போதும், பிரிதிநிதித்துவங்களை அதிகரிக்க முடியாதுள்ளது. கட்சிகள் சேர்ந்தால் என்ன, பிரிந்தால் என்ன?

இவ்வளவு முஸ்லிம் எம்.பிக்களும் எதைச் சாதித்தார்கள் என்று முகநூல் நண்பர்கள் என்னைக் கேட்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகின்றது. எனினும், அவர்கள் ஒன்றை தெரிந்துகொள்ள வேண்டும். சமூகத்துக்கு ஏற்படும் நெருக்கடிகள் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கின்ற போது, பாராளுமன்றத்திலுள்ள முஸ்லிம் எம்.பிக்களின் தொகைகளே சமூகத்தின் அடர்த்தியைக் காட்டும். மாறாக தனித்துவ கட்சிகளுக்கு எத்தனை எம்.பிக்கள் என்று எண்ணிப்பார்த்து, சமூகப் பலத்தை சர்வதேசம் அளவிடுவதில்லை. இதற்காகவே சமூகத்தின் பிரதிநிதித்துவங்களை அதிகரிக்கும் கணிப்பீடுகளில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

இன்றைய பாராளுமன்றத்தில் சிறுபான்மை எம்பிக்கள் 51 பேர் உள்ளனர். நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியில் இவர்கள் ஓரணியில் திரண்டால் நிலைமை என்னவாகும்? இவர்களை ஒன்றுசேர முடியாமல் கட்டிப் போட்டிருப்பது கட்சிகளுக்குள்ள கடமைப்பாடுகள் மட்டுமல்ல, எதிர்வரும் தேர்தலில் எதையாவது பெற்றுவிட வேண்டுமென்ற சொந்தத் தேவைகளும், அவர்களின் இருப்பை பாதுகாக்கும் நோக்கமுமே இவர்களை கட்டி வைத்துள்ளது. எனவே, “எல்லோரும் ஒரே தலைமையில் இணைவோம்” என்ற கோஷத்தை கைவிட வேண்டிய காலத்துக்குள் சிறுபான்மையினர் தள்ளப்பட்டுள்ளனர்.

நாட்டின் சட்டத் துறைக்கும், நிறைவேற்று அதிகாரத்துக்கும், முரண்பாடுகள் எழுவதற்குக் காரணமாக இருப்பது, அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தமே. இத்திருத்தத்தின் ஊடாக நிறைவேற்று அதிகாரத்தின் நீண்ட சிறகுகள் சிறிதளவிலாவது கத்தரிக்கப்பட்டுள்ளதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். இல்லாவிட்டால் பொலிஸ் ஆணைக்குழு, தேர்தல் ஆணைக்குழு, நீதித்துறை ஆணைக்குழுக்கள் போன்ற சுயாதீன அமைப்புக்கள் உருவாக்கப்பட்டமை  நிறைவேற்று அதிகாரத்துக்கு சவாலாகா அமைந்துவிட்டது. அத்துடன் நிறைவேற்று அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் பிரதான கடிவாளமாக அரசியலமைப்பு சபையும் அமைந்துள்ளது.

இவ்வாறான புதிய அரசியல் செயற்படுகளத்தில் முஸ்லிம் கட்சிகள் தேர்தலுக்காக மட்டும் ஒன்றுபடுவது சமூகப்பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வழி வகுக்காது. என்னவானாலும் அரசியலுக்கப்பாலான மத, சமூகப் பிரச்சினைகளில் முஸ்லிம் எம்.பிக்கள், கடந்த காலங்களில் ஒன்றித்துச் செயற்பட்டுள்ளமை தெரிந்த விடயமாகும். அந்தவகையில், அளுத்கம, ஜின்தொட்ட, திகன சம்பவங்களின் போது, பல்வேறு காட்சிகளில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒன்றுபட்டு அழுத்தங்களை வழங்கியதை நாம் மறந்துவிட முடியாது.

எனவே ரணில் தரப்பு, மஹிந்த தரப்பு, மைத்திரி தரப்பு என்று சிந்திக்காமல் சமூகத்தின் பிரதிநிதிகளை அதிகரிப்பதற்கான ஆயத்தங்களைச் செய்வதே புத்திசாலித்தனமானது. ஐக்கிய தேசிய கட்சியிலுள்ள முஸ்லிம் தலைமைகள், மஹிந்த தரப்புக்குச் செல்ல வேண்டும் என்று கோருவோர் பலமான காரணங்களை முன்வைப்பதாகத் தெரியவில்லை. மஹிந்தவுக்கு நிறைவேற்று அதிகாரத்தினால் வழங்கப்பட்ட பிரதமர் பதவிக்கு சட்ட அங்கீகாரத்தை பெற்றுக்கொடுப்பதே இவர்களின் உள்நோக்கமாக இருக்கின்றது. ஆனால், நடைமுறையிலுள்ள 19 ஆவது திருத்தம் இல்லாதொழிக்கப்படும் வரை, ஜனாதிபதியின் சில நடவடிக்கைள் சவாலுக்கு உள்ளாக்கப்படும். இதனால் நிறைவேற்று அதிகாரத்தை மாத்திரம் நம்பி கட்சிதாவ வேண்டுமெனக் கோர முடியாதுள்ளது. தற்போது உள்ளது போல் இரண்டு பெரும்பான்மை கட்சிகளிலும் முஸ்லிம் தலைமைகைள் பிரிந்து செயற்படுவதே பேரினவாதத்திலிருந்தும் முஸ்லிம்களைப் பாதுகாக்கும்.

எதிர்க் கட்சியில் இருந்தவாறு எவ்வாறு தேர்தலை எதிர்கொள்வது என்ற அச்சமும் சிலரைக் கட்சிதாவத் தூண்டுவதை அவதானிக்க முடிகின்றது. மக்களின் சக்திக்கு முன்னால் எதுவும் நிலைக்காது என்பதற்கு கடந்த 2015 ஜனாதிபதித் தேர்தல் வெளிப்படையான சான்று. எம்மைப் பொறுத்த வரை எதிர் வரும் தேர்தல்களில் முஸ்லிம் கட்சிகள் தனியாகவும், தேசிய கட்சிகளுடனும் இணைந்து போட்டியிட்டு, தேசிய பட்டியல் மற்றும் இன்னும் சில சலுகைகளுடன் முஸ்லிம் எம்.பிக்களின் எண்ணிக்கையை கூட்டிகொள்வது பற்றிச் சிந்திப்பதே சிறந்தது. அதிகரித்த முஸ்லிம் எம்பிக்களின் தொகையில்தான் முஸ்லிம்களின் கூட்டுப்பலம் உள்ளது. தனித்து கட்சிகளின் வளர்ச்சிகள் சமூக ஒற்றுமையைக் காட்டுமே தவிர, சமூகப்பலத்தைக் காட்டாது என்பதே இன்றைய நிலவரக் கணிப்பீடாகும்.

-சுஐப் எம்.காசிம்-

Related Post