Breaking
Fri. Nov 15th, 2024
ஜனாதிபதி மாளிகையில் அமைந்துள்ள நிலத்தடி மாளிகையில் ஒருபோதும் பாதுகாப்புக் குழு கூட்டம் நடைபெறவில்லை என்று பீல்ட்மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு, கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையின் நிலக்கீழ் அதிசொகுசு மாளிகை தொடர்பான தகவல்கள் அண்மைக்காலங்களில் ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இது தொடர்பாக கருத்து வெளியிட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, குறித்த மாளிகை ஒரு வசிப்பிடம் அன்றி விடுதலைப் புலிகளின் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்காக அமைக்கப்பட்ட ஒரு பதுங்கு குழி என்று தெரிவித்திருந்தார்.

அத்துடன் விடுதலைப் புலிகளுடனான யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் குறித்த மாளிகையில் வைத்தே பாதுகாப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

எனினும் முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா இத்தகவல்களை மறுத்துள்ளார். யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் பாதுகாப்புக் குழு கூட்டம் ஒருபோதும் நிலத்தடி மாளிகையில் நடைபெறவே இல்லை என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

முன்னாள் கடற்படைத்தளபதி வசந்த கரன்னாகொடவுடன் இணைந்தே மஹிந்த ராஜபக்ஷ இந்த நிலக்கீழ் மாளிகை நிர்மாணித்திருந்ததாகவும், தான் அந்தப் பகுதியை எட்டிப் பார்ப்பதைக் கூட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விரும்பவில்லை என்றும் சரத் பொன்சேகா தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

By

Related Post