நேபாளத்தை புரட்டி போட்ட நிலநடுக்கத்தால் அந்நாட்டின் தலைநகர் காத்மாண்டு 10 அடி தூரம் தெற்காக நகர்ந்துள்ளதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் இமயமலையின் உயரத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்று கூறியுள்ளனர்.
கடந்த சனிக்கிழமையன்று நிகழ்ந்த 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் இதுவரை 4300-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதுடன், 8000-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக அதிக அளவில் நிகழ்ந்த இந்த நிலநடுக்கத்திற்கு பின் ஏற்பட்ட ஒலி அலைகள் மூலம் பெறப்பட்ட நிலஅதிர்வு தரவின் படி, காத்மாண்டு மாநகரம் 10 அடி தூரம் தெற்காக நகர்ந்துள்ளதாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் புவியியல் வல்லுனரான ஜேம்ஸ் ஜாக்சன் தெரிவித்துள்ளார்.
அவரது ஆய்வறிக்கையானது, அடிலெய்டு பல்கலைக்கழகத்தின் புவியியல் விஞ்ஞான துறையின் தலைவரான சாண்டி ஸ்டியசியின் ஆய்வறிக்கையை ஒத்துள்ளது. யூரேசியாவிடம் இருந்து இந்திய கண்டத்தை வேறுபடுத்தும் இமயமலை பகுதியில் பூமி தட்டுகள் 10 டிகிரி அளவுக்கு வடக்கு மற்றும் வடகிழக்காக நகர்ந்ததாக இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் இந்த நிலநடுக்கத்தால் உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்டில் மி.மீ அளவிலான மாற்றங்களே ஏற்பட்டுள்ளதாகவும் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.