Breaking
Sun. Sep 29th, 2024

இலங்கைக்கு வருகை தந்திருக்கும் ஜேர்மனியின் வர்த்தக தூதுக்குழுவின் தலைவரும், பொருளாதார அலுவல்கள் மற்றும் வலுசக்தி தொடர்பான ஜேர்மன் பாராளுமன்ற  இராஜாங்க செயலாளருமான உவே பக்மேயர் நேற்று (16) முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சந்தித்தார்.

ஜனாதிபதியின் ஜேர்மன் விஜயத்தின் போது ஜேர்மனியின் அதிபர் அஞ்சலா மேர்கல், இலங்கையில் வர்த்தக முதலீட்டு வாய்ப்புக்களை கண்டறிவதற்காக வர்த்தக  தூதுக்குழுவினரை அனுப்புவதாக வாக்குறுதி அளித்ததற்கு அமைய ஜேர்மனியின் வர்த்தக தூதுக்குழுவினர் இலங்கைக்கு வருகை தந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஜேர்மனி  தனது தூதுக்குழுவை இலங்கைக்கு அனுப்பியது தொடர்பில் தனது மகிழ்ச்சியை வெளியிட்ட ஜனாதிபதி, இலங்கையின் வர்த்த சமூகத்தினை இத்தூதுக்குழுவினர்  சந்திப்பதனூடாக இரு நாடுகளுக்குமிடையில் வர்த்தக மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

புதிதாக சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிப்பதன் ஊடாகவும், மனித உரிமை ஆணைக்குழு, இலஞ்ச மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை புலன் விசாரணை செய்யும்  ஆணைக்குழு, காணக்காய்வு சேவை ஆணைக்குழு போன்ற ஏற்கனவே காணப்படும் ஆணைக்குழுக்களைப் பலப்படுத்துவதன் ஊடகவும் இலங்கையில் எவ்வாறு ஜனநாயகம்  மற்றும் நல்லிணக்க செயற்பாடுகள் துரித வளர்ச்சி கண்டுள்ளது தொடர்பாக ஜனாதிபதி, பக்மேயருக்கு இச் சந்தர்ப்பத்தின் போது விளக்கமளித்தார்.

பொருளாதார அபிவிருத்தி வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுத்து செயற்படுவதன் ஊடாக நிலையான அபிவிருத்தி மற்றும் சமாதானத்தினை அடையமுடியும் என்றும்  பொருளாதார அபிவிருத்தி வளர்ச்சியினை அடிப்படையாகக் கொண்டே வலுவான ஜனநாயகத்தையும் நீடித்த சமாதானத்தையும் கட்டியெழுப்ப முடியுமென்றும் ஜனாதிபதி இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்தார். அத்தோடு இலங்கையில் தொழில்சார் பயிற்சிகளை வழங்குவதற்கு ஜேர்மனி வழங்கி வரும் உதவிகளுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி  ஜேர்மனியின் இம் முதலீடுகள் ஊடாக 10,000 இற்கும் அதிகமான நேரடியான தொழில் வாய்ப்புகள் இலங்கையில் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

குறுகிய காலத்திற்குள் இலங்கையானது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அடைந்த வளர்ச்சிகளை வெகுவாகப் பாராட்டிய திரு பக்மேயர், ஜேர்மன் அரசானது  இலங்கை மற்றும் ஜேர்மனிக்கிடையில் மேலும் நெருக்கமான வர்த்த முயற்சிகளை முன்னெடுப்பதற்கு அர்ப்பணிப்போடு உள்ளதாகவும் அதன் ஒரு கட்டமாகவே இந்த  ஜேர்மன் வர்த்தக தூதுக்குழுவின் இலங்கை விஜயம் அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார். அத்தோடு நன்மதிப்பும் ஆரோக்கியமும் நிறைந்த இந்த வர்த்தக உறவுகளை இரு  நாடுகளும் தொடர்ந்தும் மேற்கொள்ள முடியும் என்று அவர் மேலும் நம்பிக்கை தெரிவித்தார்.

ஜேர்மன் மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு பொருளாதார உறவுகளை மேலும் சாதகமான ரீதியில் வலுப்படுத்துவதற்கு இருநாடுகளுக்குமிடையில்  முன்னெடுக்கப்படும் வர்த்தக அபிவிருத்தியின் முன்னேற்றங்கள் தொடர்பில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அறிக்கையொன்றினை தனக்கு சமர்ப்பிக்க வேண்டுமென்ற  அறிவுறுத்தலை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வழங்கவிருப்பதாக ஜனாதிபதி இச்சந்தர்ப்பத்தில் உறுதியளித்தார்.

இலங்கையில் தற்போது பல ஜேர்மனியின் தொழிற்சாலைகள் செயற்பட்டு வருவதுடன் இவற்றினூடாக சுமார் 130 பில்லியன் ரூபாய்கள் பெறுமதியுள்ள இருதரப்பு  வர்த்தகங்கள் இடம்பெறுகின்ற அதேவேளை 95 வீதமான ஜேர்மன் கார் வகைகள் இலங்கையின் முதற்தர கார் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றதுடன் இந்த  இருதரப்பு வர்த்தகங்களுடாக இலங்கையானது வருடாந்தம் அண்ணளவாக 22 பில்லியன் ரூபாய்க்களை வருமானமாக பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post