ஆனமடு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்வேறு பிரதேசங்களிலும் மேற்கொள்ளப்பட்ட பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 15 வயதுச் சிறுவன் ஒருவனுடன் இராணுவத்திலிருந்து தப்பி வந்து மறைந்திருக்கும் 26 வயது இளைஞனையும் கைது செய்திருப்பதாக ஆனமடு பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள இச்சந்தேக நபர்கள் இருவரும் புத்தளம் பொலிஸ் பிரிவினுள் இடம்பெற்ற பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளவர்கள் எனவும், கடந்த பல வருடங்களாக மிகத் தந்திரமான முறையில் இவ்விருவரும் ஆனமடு, புத்தளம், கல்கமுவ, நிக்கவெரட்டி, வாரியபொல போன்ற பிரதேசங்களில் வீடுகள் மற்றும் வியாபார நிலையங்களிலும் பணம் மற்றும் பொருட்களைக் கொள்ளையிட்டு வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விருவரால் இதுவரைக் 12 இலட்சத்து 60 ஆயிரத்த 3 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள 15 வயதுடைய சிறுவன் ஹலம்ப, மொன்னேகுளம் பிரதேசத்தைச் சேர்ந்தவன் எனவும், அவன் இதற்கு முன்னர் இரு சிறு வயதுக் குற்றங்கள் இரண்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு அநுராதபுரம் அபய சிறுவர் இல்லத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்துள்ளதோடு கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் அங்கிருந்து தப்பி வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்டுள்ள மற்றைய சந்தேக நபர் ஆனமடு குடாவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடையவர் என்றும் அவர் இராணுவத்திலிருந்து தப்பி வந்து தலைமறைவாக இருப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஆனமடு தலாகொலவெவ பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றை உடைத்து அங்கிருந்து சுமார் ஒரு இலட்சத்தி பதினெட்டாயிரம் ரூபாய் பெறுமதியான தங்க நகை மற்றும் பொருட்களைக் கொள்ளையிட்டமை, நிக்கவெரட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள களஞ்சியசாலை ஒன்றை உடைத்து அங்கிருந்து சுமார் 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்களைக் கொள்ளையிட்டமை, ஆனமடு தம்மென்னாவெவ பிரதேச வீடொன்றை உடைத்து அங்கிருந்து 24 ஆயிரம் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான இரு மடிக்கணினிகளைத் திருடியமை, ஆனமடு பிரதேச வீடொன்றை உடைத்து அங்கிருந்து சுமார் 7 இலட்சத்தி 18 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பொருட்களைக் கொள்ளையிட்டமை, ஆனமடு உஸ்வெவ வீதியில் அமைந்துள்ள புடவைக் கடை ஒன்றை உடைத்து அங்கிருந்து சுமார் 1 இலட்சத்தி 34 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்களைக் கொள்ளையிட்டமை, ஆனமடு பிரதேச வீடொன்றை உடைத்து அங்கிருந்து சுமார் 42,500 ரூபாய் பெறுமதியான தங்க நகைகளைக் கொள்ளையிட்டமை உள்ளிட்ட பல்வேறு கொள்ளைச் சம்பவங்கள் இவ்விருவரால் மேற்கொள்ளப்பட்டுள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடமிருந்து மடிக்கணினி ஒன்று, டிஜிடெல் கெமரா ஒன்று, கைடக்கத் தொலைபேசிகள் இரண்டு, ஒரு ஜோடி தங்க காதணிகள், தங்க பெண்டன் ஒன்று மற்றும் ஆண்களின் இரண்டு கைக்கடிகாரங்கள் என்பவற்றைக் கைப்பற்றியுள்ளதாக ஆனமடு பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் கொழும்பில் பிரபல தங்க நகை அடகு நிலையம் ஒன்றில் ஐந்து இலட்சத்து முப்பதாயிரம் ரூபாய் பெறுமதியான தங்க மாலை ஒன்றை அடகு வைத்துள்ளமையும், புத்தளம் நகரில் தனியார் வங்கி ஒன்றிலும் தங்க மாலையுடன் பெண்டன் ஒன்றை அடகு வைத்துள்ளமையும் தெரியவந்திருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஆனமடு பொலிஸார் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.