இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடக்கூடாது என விரும்பினால் உள்நாட்டு நீதித்துறையின் மீதான நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
கடந்த ஆட்சியாளர்கள் உள்நாட்டு நீதித்துறையின் சுயாதீனத் தன்மையை உறுதிப்படுத்த தவறியமையாலேயே சர்வதேச நாடுகளின் தலையீடுகள் உள்விவகாரங்களில் அதிகரித்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
பிரதம நீதியரசராகவிருந்த மொஹான் பீரிஸை விலக்கியமை தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே வெளிவிவகார அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையால் விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு இறுதிக் கட்டத்தில் உள்ளது. உள்விவகாரத்தில் வெளிநாடுகள் தலையிடமுடியாது.
எவருக்கு எதிராகவும் சர்வதேச சட்டங்களுக்கு அமைய தண்டனை வழங்க முடியாது. உள்நாட்டு நீதித்துறைக்கு அமையவே விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே எமது உறுதியான நிலைப்பாடாகும்.
இலங்கையின் நீதித்துறையின் சுயாதீனத்தன்மையை கூடிய விரைவில் உறுதிப்படுத்தி உள்நாட்டு சட்டதிட்டங்களுக்கு அமைய விசாரணைகள் நடத்தப்படும். இலங்கையில் நீதித்துறைசார்ந்த வல்லுனர்கள் இருக்கின்றனர். நீதித்துறையின் மீது எமக்கு நம்பிக்கையுள்ளது.” என்றுள்ளார்.