Breaking
Mon. Dec 23rd, 2024

நாடாளுமன்றத் தேர்தலின்போது தேர்தல் சட்டவிதிகளை மீறியது தொடர்பான முறைப்பாடுகளுக்கெதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சார காலத்தில் தேர்தல் சட்டவிதிகளை மீறியது தொடர்பாக சுமார் 1156 முறைப்பாடுகளுக்கெதிராக தேர்தல்கள் ஆணையாளர் நீதிமன்றம் செல்லவுள்ளார்.

இலங்கையின் தேர்தல் வரலாற்றில் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய சம்பவங்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் நீதிமன்றம் செல்வது இதுதான் முதற் தடவையாகுமென மேலதிக தேர்தல் ஆணையாளர் எம். மொஹமட் கூறினார்.

இதன்படி தேர்தல்கள் திணைக்களத்திற்கு கிடைத்துள்ள அனைத்து முறைப்பாடுகளையும் பரிசீலனை செய்து வருவதாகவும் அவற்றை நீதிபதியிடம் ஒப்படைக்கவிருப்பதாகவும் அவர் கூறினார்.

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்ற வேட்பாளர்கள் மட்டுமன்றி நாடாளுமன்றத்துக்கு தெரிவான உறுப்பினர்களுக்கு எதிராகவும் தேர்தல் சட்டவிதிகளை மீறியது தொடர்பான குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளன.

விதிகளை மீறி தேர்தல் காலத்தில் நியமனங்கள் மற்றும் பதவி உயர்வு வழங்கியமைக்காக 214 முறைப்பாடுகளும், சட்டவிரோத போஸ்டர் கட்அவுட்டிற்காக 334 முறைப்பாடுகளும் அரசாங்க சொத்துக்களை முறைகேடாக உபயோகத்திமைக்காக 171 முறைப்பாடுகளும் கூட்டம் மற்றும் ஊர்வலம் நடத்தியமைக்காக 239 முறைப்பாடுகளும் தேர்தல்கள் செயலகத்திற்கு கிடைத்துள்ளன.

அதேபோன்று அலுவலக நேரங்களில் அரசாங்க அதிகாரிகள் தேர்தல் கடமைகளில் ஈடுபட்டமை தொடர்பாக 198 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

அமைச்சின் செயலாளர்கள் இருவர், ஒரு உதவிச் செயலாளர் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள் தேர்தல் விதிமுறைகளை மீறியதற்கான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இவர்கள் உயர் நீதிமன்றத்தினால் குற்றவாளிகளென நிரூபிக்கப்பட்டால் எதிர்வரும் 07 வருடங்களுக்கு வாக்காளராக பதிவு செய்யப்படமாட்டார்கள் என்பதுடன் வாக்களிக்கவும் முடியாது.

தேர்தல் விதிகளை மீறிய நபர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில் அவரது பதவி ரத்துச் செய்யப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Post