கடந்த அரசாங்கத்தில் கைத்தொழில் அமைச்சராக ரிஷாத் பதியுத்தீன் இருந்த போது அவரது அமைச்சிற்குள் பலாத் காரமாக நுழைந்து குழப்பம் விளை வித்த சம்பவம் தொடர்பில் பொது பல சேனா அமைப்பின் இரு பிக்குகளை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இச்சமப்வம் தொடர்பில் ஏற்கனவே குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பைச் சேர்ந்த 6 பிக்குமார்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில், தொடர்ச்சியாக வழக்குகளுக்கு ஆஜராகாத 4 ஆவது மற்றும் 5 ஆவது சந்தேக நபர்களான பிக்குகளையே கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான உத்தரவை கோட்டை பிரதான நீதிவான் பிறப்பித்துள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த நாளொன்றில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் றிஷாத் பதியுதீனின் அலுவலகத்துக்குள் அத்துமீறி பொது பல சேனாவின் பிக்குகள் சிலர் நுழைந்திருந்தனர்.
மேற்படி சம்பவம் தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்த 6 பிக்குமார்களுக்கும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்ததது. இதன்படி நீதிமன்றத்தில் ஆஜரான பிக்குமார்கள் அறுவரையும் தலா ஒரு இலட்சம் ரூபா பிணையில் செல்ல கொழும்பு கோட்டை நீதிவான் அனுமதி வழங்கினார்.
இந் நிலையில் அவர்களுக்கு வழக்கில் தொடர்ச்சியாக ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. எனினும் 4 ஆவது மற்றும் 5 ஆவது சந்தேக நபர்களான பிக்குகள் தொடர்ச்சியாக மன்றில் ஆஜராகாமல் இருந்ததைத் தொடர்ந்து அவர்களை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் மீண்டும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில் நேற்று மன்றில் பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் மற்றும் மைத்திரி குணரத்ன ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.
-Vidivelli-