நீதிமன்றம் மிகவும் மரியாதைக்கு உரிய இடமாகவே கருதப்படுகின்றது. இந்த நிலையில் இரண்டு பெண்கள் நீதிமன்றத்திற்கு உள்ளேயே ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர்.
இவ்வாறு தாக்கிக் கொண்ட இரண்டு பெண்களையும் கைது செய்து விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு நீதிமன்றில் இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
கொழும்பு நீதிமன்ற நீதவான் ஒகஸ்டா அதபத்து, குறித்த பெண்களுக்கான விளக்க மறியல் உத்தரவினை பிறப்பித்துள்ளார். குறித்த இரண்டு சந்தேகநபர்களையும் நாளை வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
தமது கணவருக்காக பிணை கோரி நீதிமன்றம் சென்றிருந்த பெண் ஒருவரும் தனது மகனுக்காக பிணை கோரி நீதிமன்றம் சென்றிருந்த பெண் ஒருவரும் மோதிக் கொண்டுள்ளனர்.
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் இறுதியில் கைகலப்பாக மாறியுள்ளது. நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு பங்கம் ஏற்படும் வகையிலும், நீதிமன்றத்தை அவமரியாதை செய்யும் வகையிலும் செயற்பட்டதாக இரண்டு பெண்கள் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வெலிக்கடைப் பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களே இவ்வாறு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.