Breaking
Mon. Nov 18th, 2024

பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ  மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் செயற்படுவதற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ள இடைக்கால தடை உத்தரவை கெளரவித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனா உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென   அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாத் பதியுதீன் இன்று (12) தெரிவித்தார். 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிராக ஐக்கிய தேசிய முன்னணியால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான இடைக்கால தடையுத்தரவு வழங்கப்பட்ட பின்னர்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;

கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி ஜனாதிபதி மேற்கொண்ட தவறை திருத்திக்கொண்டு, சட்டவிரோதமாக செயற்படுகின்ற காட்டரசுக்கு எதிராகவும், அவர்களினால் அரச நிதிகள் செலவு செய்வதற்கு எதிராகவும் பாராளுமன்றில் 122 உறுப்பினர்கள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிபெற்ற பின்னரும் இதுவரையில் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் ஜனாதிபதி தொடர்ந்தும் இழுத்தடிப்புச் செய்து வருகிறார். 

எனவே, அரசியலமைப்புக்கு கட்டுப்பட்டு, தான் செய்த தவறை அவர் திருத்திக்கொண்டு இன்று நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தடையுத்தரவுக்கு செவிசாய்த்து, பெரும்பான்மை பாராளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளையும் ஏற்றுக்கொண்டு ஜனாதிபதி இனியாவது நடவடிக்கை  எடுப்பார் என நம்புகின்றோம்  என்றும் அவர் தெரிவித்தார். 

-ஊடகப்பிரிவு-

Related Post