Breaking
Thu. Jan 9th, 2025

நீதிமன்ற உத்தரவை மீறி லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் செய்த பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர், பிக்குகள் உள்ளிட்ட 27 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய முன்னிலையில் இன்று (08) சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போது அனைவரையும் தலா ஒரு லட்சம் ரூபா தனிநபர் பிணையில் செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 23ம் திகதி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விசாரணைக்கு அழைத்திருந்தது.

இந்த விடயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் ஆர்ப்பாட்டம் செய்ய அழைப்பு விடுத்திருந்தனர்.

இது தொடர்பில் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்த பொலிஸார் குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு தடை உத்தரவு பெற்று அதனை உரியவர்களுக்கு அறிவித்தனர்.

எனினும் நீதிமன்ற தடை உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதால் பொலிஸார் அது தொடர்பில் நீதிமன்றுக்கு அறிவித்ததோடு 27 பேருக்கு நீதிமன்றம் அழைப்பு விடுத்திருந்தது.

அதன் அடிப்படையில், பாராளுமன்ற உறுப்பினர்களான டளஸ் அழகப்பெரும, ஜானக பிரியந்த பண்டார, சரத் வீரசேகர, ரொஷான் ரணசிங்க, ஜயந்த கெட்டகொட, காமினி லொக்குகே, பந்துல குணவர்த்தன, எஸ்.எம்.சந்திரசேன, வீரகுமார திஸாநாயக்க, உதித்த லொக்குபண்டார ஆகியோருக்கும் மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, மாகாண சபை உறுப்பினர்களான உதய கம்மன்பில, ரொஜர் செனவிரத்ன ஆகியோர் உள்ளிட்ட 27 பேருக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்தது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட வட்டினாபா சோமானந்த, முருந்தெட்டுவே ஆனந்த, மெதகொட அபேதிஸ்ஸ, இத்தேகந்தே சத்தாதிஸ், கலகொட அத்தே ஞானசார ஆகிய தேரர்களுக்கும் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்தது.

இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜரான இவர்கள் தனிநபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

Related Post