கல்குடாத் தொகுதியில் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள நீர்ப்பாசன பொறியிலாளர் அலுவலகத்தின் மூலம் முப்பதாயிரம் ஏக்கர் விவசாய செய்யும் தமிழ் முஸ்லிம் சமூகம் நன்மைபெறப்போகின்றது என்று விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடாத் தொகுதியை மையப்படுத்தி புதிதாக நீர்ப்பாசன பொறியிலாளர் அலுவலகம் திறந்து வைப்பதற்கான ஆரம்பக் கூட்டம் நேற்று (14.01.2019) திங்கள்கிழமை மாலை வாழைச்சேனை கமநல சேவைகள் காரியாலயத்தில் இடம் பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்கனவே இரண்டு நீர்ப்பாசன காரியாலயங்கள் இருக்கும் வகையில் விவசாயிகளின் நன்மை கருதி கல்குடாத் தொகுதியை மையப்படுத்தி புதிய நீர்ப்பாசன காரியாலயம் அமையப்பெறவுள்ளது. இதனால் வாகனேரி, கட்டுமுறிவு, வடமுனை, புனானை மேற்கு நீர்பாசன குளங்கள் புணரமைப்பு செய்யப்படுவதுடன் நேரடியாக 11800 ஏக்கர் வயல்காணிகள் பிரயோசனம் அடைவதுடன் எதிர்காலத்தில் மேலும் பதினையாயிரம் வயல்காணிகள் நெற்செய்கை மேற்கொள்வதற்கும் இத்திட்டம் உதவியாக இருக்கும் என்று விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மேலும் தெரிவித்தார்.
புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள நீர்ப்பாசனத்திட்டத்தின் ஊடாக விவசாயிகள் அடையவுள்ள நன்மைகள் தொடர்பாக நீர்ப்பாச திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதி பணிப்பாளர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டு இத்திட்டத்தின் நன்மைகள் தொடர்பாக விவசாயிகளுக்கு விளக்கம் அளிப்பது என்றும் தீர்மாணிக்கப்பட்டது.
புதிய நீர்ப்பாசன பொறியிலாளர் அலுவலகம் ஆரம்பத்தில் ஓட்டமாவடியில் அமைந்துள்ள நீர்ப்பாசன பொறியிலாளர் உப காரியாலயத்தில் தற்காலிகமாக ஆரம்பிப்பது என்றும் அதற்குறிய நிறந்தர கட்டிடம் வாகனேரியில் அமைப்பது என்றும் தீர்மாணிக்கப்பட்டது.
விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தலைமையில் இடம்பெற்ற கூட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.யோகேஸ்வரன், ஜி.ஸ்ரீநேசன், முன்னாள் கிழக்கு மாகான விவசாய அமைச்சர் கே.துரைராஜசிங்கம், மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் எம்.உதயகுமார், நீர்ப்பாசன திணைக்களத்தின் மட்டக்கப்பு மாவட்ட பிராந்திய பணிப்பாளர் எம்.பி.எம்.அஸார், ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி, பிரதேச செயலாளர்கள், நீர்ப்பாசன திணைக்கள பொறியலாளர்கள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.