Breaking
Mon. Nov 18th, 2024

-சுஐப் எம் காசிம் –

சுனாமியால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு சவூதி அரசினால் நுரைச்சோலையில் கட்டி வழங்கப்பட்ட வீடுகளில் அவர்களை வாழவிடாது தடுத்த இனவாதிகள் முசலிப்பிரதேசத்திலும் மீள்குடியேறி வரும்  முஸ்லிம்களை விரட்டியடிக்க முயன்று வருவதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் குற்றஞ் சாட்டினார்.

புத்தளம் லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில்  இடம்பெற்ற உலமாக்களுக்கான கிரிக்கட் சுற்றுப் போட்டியில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் பிரதம விருந்தினராக பங்கேற்று உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார்.

புத்தளம் புளிச்சாக்குளம் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்தப்போட்டியில் 20 மாவட்டங்களை சேர்ந்த அணியினர் பங்கேற்றனர்.

 அமைச்சர் இங்கு மேலும் கூறியதாவது,

வில்பத்து விடயத்தில் சிங்கள மக்கள் மத்தியிலே இனவாதிகள் பெரும் பூகம்பத்தை கிளப்பி முஸ்லிம்களையும் என்னையும் காடழிக்கும் சமூகமாகவும், தேச விரோதிகளாகவும் காட்ட முற்படுகின்றனர். என்மீது பலமுனைகளிலும் அம்புகளை வீசி, அரசியல் வாழ்வில் என்னை ஓரங்கட்ட முயற்சிக்கின்றனர். எவ்வளவுதான் இவர்கள் என்னை தாக்கினாலும் அத்தனையையும் தாங்கிக்கொண்டு சமூகத்திற்காக பொறுமையுடன் பணியாற்றுகின்றோம்.

வில்பத்து விவகாரத்தில் வடக்கு முஸ்லிம்களின் நியாயங்களுக்காக ஒன்றிணைந்து குரல் கொடுக்க முஸ்லிம் அரசியல் தலைமைகளும், ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் கவுன்சில், சூரா கவுன்சில் உட்பட பல சிவில் அமைப்புக்கள் முன்வந்துள்ளன. எனினும் ஒரேயொரு முஸ்லிம் கட்சி எமது நியாயமான போராட்டங்களுக்கு ஒத்துழைக்கவில்லை. என்னதான் பிரச்சினைகளுக்கு நாம் முகம் கொடுத்தாலும் எமது பணிகளில் இருந்து நாம் பின்வாங்கமாட்டோம்.

முஸ்லிம் சமூகம் இன்று பல்வேறு பிரச்சினைகளுக்கும் சவால்களுக்கும் முகம்கொடுத்து வருகின்றது. முஸ்லிம் சமூகம் ஒற்றுமைப்பட்டு  தமது அபிலாசைகளை வென்றெடுக்கும் தருணம் இது. நமக்குள் ஏற்படும் ஒற்றுமையை பயன்படுத்தியே அரசுக்கு அழுத்தம் கொடுத்து நமது உரிமைகளை வென்றெடுக்க முடியும். வெறுமனே மனம் போன போக்கில் முடிவுகளை மேற்கொண்டு சமூகத்தை நட்டாற்றில் விட முடியாது.

உலமாக்கள் வெறுமனே ஆன்மீக துறைகளில் மட்டும் ஈடுபட்டு சமூகத்தை முழுமையாக வழி நடாத்த முடியாது. விளையாட்டும் நல்ல மனோபக்குவத்தையும் மனோ வலிமையையும் வழங்கக்கூடிய அரிய சாதனமாகும். உலமாக்கள்  இந்தத் துறையில் மட்டும் இன்றி தகவல் தொழிநுட்பம், பிற மொழியில் பாண்டித்தியம் ஆகியவற்றிலும் தேர்ச்சி பெற வேண்டும் அதன் மூலமே நவீன சவால்களுக்கு முகம்கொடுக்க முடியும்.

இஸ்ரேல் போன்ற நாடுகளின் அபார வளர்ச்சிக்கு அவர்கள் கல்வி, பொருளாதாரத்துறையில் மட்டுமன்றி ஊடகத்துறையிலும் கொடிகட்டிப் பறப்பதே பிரதான காரணம். இலங்கை வாழ் முஸ்லிம்களை பொறுத்த வரையில் அவர்களின் பிரச்சினைகளை வெளிக்கொணர்வதற்கு சரியான ஊடகம் இல்லை. முஸ்லிம் சமுதாயத்தை பற்றிய அபாண்டங்களுக்கு தக்க பதிலை ஊடகங்கள் மூலம் சிங்கள சமூகத்திற்கு எத்திவைக்க முடியாத துர்ப்பாக்கிய நிலையில் இருக்கின்றோம் என்றும் அமைச்சர் கூறினார்.

இந்த நிகழ்வில் பாரளுமன்ற உறுப்பினர் நவவி மற்றும் முஹாஜிரீன் அரபுகல்லூரி அதிபர் முபாரக் மௌலவி மற்றும் உலமாக்கள் பங்கேற்றிருந்தனர்.

7M8A9762 7M8A9815 7M8A9913

By

Related Post