Breaking
Fri. Nov 22nd, 2024

விமான விபத்தை சந்திப்பதற்கு முந்தைய நாளில் நேதாஜியின் பயணம் பற்றிய ரகசிய ஆவணங்களை இங்கிலாந்து இணையதளம் வெளியிட்டுள்ளது.

இந்திய சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், 1945-ம் ஆண்டு ஆகஸ்டு 18-ந்தேதி தைவானில் நடந்த விமான விபத்தில் சிக்கினார். அதில் அவர் இறந்து விட்டதாக கூறப்பட்ட போதிலும், அதை ஒருதரப்பினர் மறுத்து வருகிறார்கள். அதனால், நேதாஜி பற்றிய மர்மம் இன்னும் நீடித்து வருகிறது. இதுபற்றிய ரகசிய ஆவணங்கள் இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், விமான விபத்தை சந்திப்பதற்கு முந்தைய நாளில் (17-8-1945) நேதாஜியின் பயணங்கள் பற்றிய ரகசிய ஆவணங்களை இங்கிலாந்தைச் சேர்ந்த ஓர் இணையதளம் வெளியிட்டுள்ளது. அந்த இணையதளத்தை சுயசார்பு பத்திரிகையாளரும், நேதாஜியின் உறவினருமான ஆஷிஸ் ரே நடத்தி வருகிறார்.

அந்த ஆவணங்களில் கூறப்பட்டுள்ளதாவது:-

விமான விபத்துக்கு முந்தைய நாள், நேதாஜி, தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து புறப்பட்டு, வியட்நாமில் உள்ள சியாகூனுக்கு போய்ச் சேர்ந்தார். அதற்கு இருநாட்களுக்கு முன்புதான், இரண்டாம் உலகப்போரில் தோல்வியை ஏற்று ஜப்பான் சரண் அடைந்திருந்தது. இருந்தபோதிலும், திட்டமிட்டபடி, நேதாஜி ஜப்பான் செல்வதற்கு நேரடி விமானம் கிடைக்கவில்லை.

இறுதியாக, ஜப்பான் அதிகாரிகளுக்கும், நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்துக்கும் இடையே இணைப்பு பாலமாக செயல்பட்ட ஜெனரல் இசோடா என்பவர், தைவான் வழியாக ஜப்பானுக்கு செல்லும் ஒரு விமானத்தில் இரண்டு இருக்கைகள் மட்டும் இருப்பதாக நேதாஜியிடம் தெரிவித்தார். இதன்மூலம், நேதாஜியின் பெரும்பாலான ஆலோசகர்களும், அதிகாரிகளும் அவருடன் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இருப்பினும், அந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்ளுமாறு நேதாஜிக்கு அறிவுறுத்தப்பட்டது. அவரும் ஏற்றுக்கொண்டு, தன்னுடன் பயணிப்பதற்கு இந்திய தேசிய ராணுவத்தைச் சேர்ந்த ஹபிப் உர் ரகுமானை தேர்ந்தெடுத்தார். அடுத்து, விமானத்தில் அளவுக்கு அதிகமான சுமை இருப்பதாக ஒரு பிரச்சினை எழுந்தது.

எனவே, நேதாஜி தனது புத்தகங்கள் மற்றும் ஆடைகளில் ஒரு பகுதியை அங்கேயே விட்டுச்சென்றார். அதன்பிறகும் சுமை அதிகமாக இருந்ததால், ஓடுபாதை முழுவதும் ஓடிய பிறகுதான் விமானம் மேலே எழும்ப முடிந்தது.

அதே விமானத்தில், ரஷிய விவகாரங்களை கவனிக்கும் ஜப்பானிய ராணுவ அதிகாரி ஷிதேயும் இருந்தார். அவர் சீனாவில் உள்ள மஞ்சூரியாவுக்கு சென்று கொண்டிருந்தார். அவருடன் நேதாஜியும் மஞ்சூரியாவுக்கு செல்ல வேண்டும் என்று அவருடைய ஆலோசகர்கள் யோசனை தெரிவித்தனர். அதை நேதாஜியும் ஏற்றுக்கொண்டார்.

விமானம் புறப்படுவதற்கு தாமதமாகி விட்டதால், திட்டமிட்டபடி தைவானுக்கு செல்வதற்கு பதிலாக, வழியில் வியட்நாமில் உள்ள டூரன் நகரில் அந்த விமானம் தரை இறக்கப்பட்டது. அங்கு ஜப்பானிய அதிகாரிகள், விமானத்தின் சுமையை குறைக்கும்விதமாக, விமானத்தை தகர்க்கும் இயந்திர துப்பாக்கிகள், வெடி பொருட்கள் உள்பட 600 கிலோ எடையுள்ள பொருட்களை கீழே இறக்கினர்.

அன்றைய இரவில், டூரன் நகரில் உள்ள ஓட்டல் மோரினில் நேதாஜி தங்கினார்.

இவ்வாறு அந்த ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது.

நேதாஜி மர்மம் பற்றி விசாரிக்க, இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு அமைக்கப்பட்ட ஷாநவாஸ் கான் கமிட்டி முன்பு, நேதாஜியின் சுதந்திர இந்திய தற்காலிக அரசு, இந்திய தேசிய ராணுவம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அளித்த சாட்சியங்களும் இங்கிலாந்து இணையதளம் வெளியிட்ட இந்த ரகசிய ஆவணங்களில் இடம்பெற்றுள்ளன.

By

Related Post