Breaking
Mon. Dec 23rd, 2024

இந்திய தேசிய ராணுவத்தை கட்டமைத்து இந்திய நாட்டின் விடுதலைக்காக போராடிய நேதாஜி, கடந்த 1945ம் ஆண்டு தைவான் விமான விபத்தில் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டாலும், அவரது மரணம் குறித்த மர்மம் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. மேலும், நேரு பிரதமராக இருந்தபோது நேதாஜி குடும்பத்தினர் உளவு பார்க்கப்பட்டதாகவும் எழுந்துள்ள சர்ச்சைகளுக்கும் இன்று வரை விடை கிடைக்காமல் உள்ளது.

நேதாஜி குறித்து மத்திய அரசு வசமுள்ள 130 ரகசிய ஆவணங்கள் வெளியிடப்பட்டால் இந்த மர்மங்களுக்கு விடை கிடைக்கும் என்று கூறப்பட்ட நிலையில், கடந்த முறை மான்கிபாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நேதாஜி குடும்பத்தினரை தாம் சந்திக்க உள்ளதாகக் கூறினார்.

அதன்படி நேதாஜி குடும்பத்தினர் கடந்த 14-ம் தேதி டெல்லியில் உள்ள இந்திய பிரதமர் வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்தனர். அவர்களுடன் இந்திய பிரதமர் மோடி உரையாடினார். இந்த சந்திப்பின்போது இந்திய மந்திரி ராஜ்நாத் சிங், இந்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோரும் உடனிருந்தனர்.

இந்த சந்திப்பின்போது மேற்குவங்காள அரசு நேதாஜி குறித்த ஆவணங்களை சமீபத்தில் வெளியிட்டதை சுட்டிக்காட்டிய நேதாஜி குடும்பத்தினர், மத்திய அரசும் அதனைப் பின்பற்றி நேதாஜி குறித்த ஆவணங்களை வெளியிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.

இந்த சந்திப்பிற்கு பின்னர் டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த மோடி, நேதாஜி குறித்த ஆவணங்களை வெளியிடுவதற்கான நடவடிக்கை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 23-ம் தேதி நேதாஜியின் பிறந்த நாளில் தொடங்குமென்றும் வெளிநாடுகளும் தங்கள் வசம் உள்ள நேதாஜியின் ஆவணங்களை வெளியிடுவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கும் என்றும் கூறியிருந்தார்.

இதையடுத்து, சுஷ்மா ஸ்வராஜ் நேதாஜி குறித்த ஆவணங்களை வெளியிட்டு உதவுமாறு ரஷ்யாவின் ஒத்துழைப்பைக் கோரியிருந்தார். அவரது கோரிக்கையை ஏற்றுள்ள ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் லாவ்ரோவ் இந்த விஷயத்தில் உதவுவதாக இன்று உறுதி அளித்துள்ளார். இதனால், நேதாஜியின் பிறந்த நாள் அன்று, அவர் குறித்த ஆவணங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

By

Related Post