80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான நிலநடுக்கத்தை சந்தித்த நேபாளத்தில் இதுவரை 7 ஆயிரம் பேருக்கு மேல் இறந்துவிட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அங்கு செய்தி சேகரிக்க சென்றுள்ள இந்திய பத்திரிகையாளர்களை மனிதாபிமானம் அற்ற முறையில் செய்தி சேகரிப்பில் ஈடுபடுவதாகக்கூறி அவர்களை வெளியேறும்படி வலியுறுத்தி உள்ளனர்.
இந்திய பத்திரிகையாளர்களுக்கு எதிராக, “உங்கள் நாட்டிற்கு திரும்பி போங்கள்” என்று ஹேஷ்டேகை நேற்று உருவாக்கி டுவிட்டரில் ஒரு லட்சம் டுவிட்டுகளை பதிவு செய்துள்ளார்கள் நேபாள மற்றும் இந்தியாவை சேர்ந்தவர்கள்.
டுவிட்டர் பதிவுகளில் முக்கியமாக மூன்று குற்றசாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. முதலாவதாக நேபாளத்திற்கு இந்திய அரசு செய்து வரும் உதவிகளை கொச்சையாக விளம்பரப்படுத்துவதாக குற்றம் சாட்டுகிறார்கள். கஷ்டத்தில் இருக்கும் ஒருவருக்கு உதவி செய்துவிட்டு திரும்பத் திரும்ப அதை சொல்லிக் காட்டுவதை எப்படி உதவி என்று சொல்ல முடியும்? என கேள்வி எழுப்புகின்றனர். முக்கியமாக நிலநடுக்கம் நடந்த அன்று மோடி செய்த உதவிக்கு நன்றி சொல்லும் விதமாக ‘#பிரதமருக்கு நன்றி’ என்ற ஹேஷ்டேகை உருவாக்கி டுவிட்டரில் ட்ரெண்டிங் செய்தது கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது.
இரண்டாவதாக நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களை கருணையுடன் அணுகாமல் முழுக்க முழுக்க பரபரப்பையும், வினோதமான சம்பவங்களையும் மட்டுமே முன்வைத்து செயல்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. மூன்றாவதாக செய்தி சேகரிக்கிறேன் என்ற பெயரில் நிவாரணப் பணிகளுக்கு தடையாக இருப்பதாக கூறப்படுகிறது.