Breaking
Tue. Dec 24th, 2024

நேபாளத்தை பொருத்தளவில், நீண்ட நூற்றாண்டுகளாகவே, மக்கள் மத்தியில் ஒரு செவிவழிச் செய்தி உலவிவருகிறது. அதாவது, ஒவ்வொரு 80 வருடங்களுக்கு ஒருமுறையும், நேபாளம் மிகப்பெரிய நிலநடுக்கத்தை சந்திக்கும்..என்பதுதான் அந்த செவிவழிச் செய்தியாகும்.

இதேபோல 1934ம் ஆண்டு, நேபாளத்தில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. நேபாளம்-பீகார் நிலநடுக்கம் என்று அது அழைக்கப்பட்டது.

இந்த பெரிய நிலநடுக்கத்தில், 12 ஆயிரம் பேர் நேபாள நாட்டில் உயிரிழந்தனர். இந்தியாவில் 7 ஆயிரம் பேர் இறந்தனர்.இதன்பிறகு சிறிய அளவில் பலமுறை நேபாளத்தில் நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. ஆனால், பெரிய உயிரிழப்பை ஏற்படுத்தும் அளவுக்கு அவை கிடையாது.

இந்நிலையில், நேபாள நாட்டு மக்கள் மத்தியில் கடந்த சில ஆண்டுகளாகவே நில நடுக்க பீதி அதிகரிக்க தொடங்கியது. அதிலும், முதியவர்கள் எப்படியும் பெரிய நிலநடுக்கம் வந்தே தீரும் என்று எச்சரித்துக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில்தான், 2011ம் ஆண்டு பெரிய ஒரு நிலநடுக்கம் நேபாளத்தை தாக்கியது. 6.9 என்ற ரிக்டர் அளவில் நில நடுக்கம் பதிவானாலும், அதிருஷ்டவசமாக உயிரிழப்பு 11 பேருடன் முடிந்தது.

பெரும்பாலான நேபாள இளைஞர்கள் தாங்கள் பெரிய பாதிப்பில் இருந்து தப்பிவிட்டதாக நம்பினர். ஆனால் முதியவர்களோ, பெரிய அளவுக்கு பாதி்பை ஏற்படுத்தும் நில நடுக்கம் வந்தே தீரும் என்று கூறிக்கொண்டிருந்தனர்.

இன்று நேபாளத்தை தாக்கியது அதுபோன்ற பெரிய நிலநடுக்கமாகும். ஏனெனில், ரிக்டர் அளவுகோலில் இது 7.9 ஆக பதிவாகியுள்ளது.

1934ம் ஆண்டுக்கு பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம் இதுவாகும். அதேபோல மக்கள்தொகை பெருக்கம் காரணமாக, உயிர்பலி எண்ணிக்கையும், 80 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட இப்போது அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அறிவியல் என்ன சொல்கிறது?

நேபாள நாட்டு மக்களுக்கு தலைமுறை தலைமுறையாக இதுபோன்ற ஒரு தகவல் கடத்தப்படுவதன் பின்னணியில் அறிவியல் உண்மையும் உள்ளது.அதாவது, இந்திய புவித்தட்டு, எப்போதுமே யூரோஏசியன் புவித்தட்டை அழுத்தியபடி மேலே எழும்பிக் கொண்டுள்ளது. எனவேதான், இமயமலை ஆண்டுக்கு 1 செ.மீ அளவுக்கு வளர்ந்து கொண்டுள்ளது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

பல ஆண்டுகளாக தொடரும் இந்த அழுத்தத்தை, ஒரு நிலநடுக்கத்தின் மூலம், குறைத்துக்கொள்வது பூமியின் இயல்பு என்கின்றனர் விஞ்ஞானிகள்.

இந்த காலகட்டத்தை நேபாள நாட்டு பெரியவர்கள் கணித்துதான், செவிவழியாக சொல்லி வந்துள்ளனர்.

Related Post