நேபாளத்தை கடந்த சனிக்கிழமையன்று தாக்கிய 7.9 ரிக்டர் அளவிலான மோசமான நிலநடுக்கப் பேரழிவில் பலியானோர் எண்ணிக்கை 3200 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 6500 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
சனிக்கிழமையன்று நிகழ்ந்த நிலநடுக்கத்தின் தொடர்ச்சியாக, அங்கு நேற்று பிற்பகலில் 6.7 ரிக்டர் அளவு கொண்ட நில நடுக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து நேற்று இரவில் 5.4 ரிக்டர் அளவு கொண்ட நிலஅதிர்வும், இன்று காலை பல பகுதிகளில் மீண்டும் நில அதிர்வும் ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக அந்நாட்டு மக்கள் அனைவரும் வெட்டவெளியில் கூடாரம் அமைத்து தங்கியுள்ளனர். இரவு நேரங்களில் மக்கள் தூக்கமின்றி தொடர் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று மாலை கனமழை பெய்ததால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது. எனினும் இன்று காலை வெயில் தலைகாட்டியதால் மக்கள் சிறிது மகிழ்ச்சியடைந்தனர். அங்கு தொடர்ந்து நடைபெற்று வரும் மீட்பு பணிகளில் இதுவரை 3218 பேர் பிணமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பேரிடர் மீட்புப்பணி பிரிவு தலைவரான ரமேஷ்வர் டங்கல் தெரிவித்தார். இதுவரை 6500 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
தங்கள் நாட்டில் பேரழிவு நிகழ்ந்த பின் நடைபெறும், மீட்பு பணிகளில் உலக நாடுகள் செய்து வரும் உதவிகள், பெரிதும் வரவேற்கத்தக்கது என பேரிடர் மேலாண்மை அமைப்பின் உறுப்பினரான தீபக் பாண்டா கூறினார்.