– A.R.A. பரீல் –
தேர்தலுக்காக முஸ்லிம்களின் சமய கடமைகள் பாதிக்கப்படக் கூடாதெனவும் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முஸ்லிம்களின் புனித மாதமான ரமழானில் நடாத்த வேண்டாம் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கே ஜனாதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
எதிர்வரும் ஜூன் மாதம் முஸ்லிம்களின் புனித கடமைகளில் ஒன்றான நோன்பு நோற்கும் ரமழான் மாதமாகையால் அம்மாதத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடாத்த வேண்டாம் எனவும் தேர்தலை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்துக்கும் பின்பு நடாத்துமாறும் முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா ஆகியோரிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.
அமைச்சர் ஹலீமின் கோரிக்கையை ஆராய்ந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்குறிப்பிட்ட உத்தரவினைப் பிறப்பித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஜூனில் நடாத்தப்பட்டால் அதனால் முஸ்லிம் வாக்காளர்களும் அபேட்சகர்களும் பாதிக்கப்படுவார்கள்.
முஸ்லிம்களின் இரவு நேர தராவீஹ் தொழுகை உட்பட விசேட மத கிரியைகளுக்கு இதனால் பாதிப்பு ஏற்படுமெனவும் அமைச்சர் ஹலீம் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்தார்.