-ஊடகப்பிரிவு-
அம்பாறையில் முஸ்லிம்களுக்கு எதிரான சம்பவங்கள் இடம்பெற்று ஒரு வாரத்திலேயே கண்டியில் மோசமான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன எனவும், இதற்கான நியாயங்கள் கேள்விக்குறியாகியுள்ளன என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாராண சூழ்நிலை தொடர்பில் பாராளுமன்றத்தில் (06) இடம்பெற்ற விஷேட ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றும் போதே, இஷாக் எம்.பி இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தனது உரையில்,
நாம் ஜனாதிபதி மற்றும் பொலிஸ்மா அதிபருடனும் பேசியபோது பொலிஸ்மா அதிபர் போதிய பாதுகாப்பு வழங்குவதாக எமக்கு உறுதியளித்தார். எனினும் அங்கு நிலமை மோசமாகவே நாம் மீண்டும் பொலிஸ் மா அதிபருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டோம் அப்போது அவர் அங்கு ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப் போவதாகக் குறிப்பிட்டார். அனைத்தும் நடந்து முடிந்த பின்னரான இத்தகைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் அவரிடம் கேட்க விரும்புகின்றேன்.
சம்பவம் இடம்பெற்ற போது போதியளவு பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கவில்லை. சில பொலிசாரே ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரைப் பொலிசாரால் கலைக்க முடியுமானால் ஏன் இந்த கலக்காரர்களை கலைத்திருக்க முடியாது? பொலிஸ் மா அதிபர் செயலாற்றியிருந்தாரா?
சிங்கப்பூர் போன்று இலங்கையைக் கட்டியெழுப்பப் போவதாக பிரதமர் அடிக்கடி கூறிவருகிறார். இவ்வாறான சம்பவங்கள் தொடருமேயானால் சிங்கப்பூர் அல்ல சோமாலியா, தன்சானியாக நாடுகள் போன்று இலங்கை பின்னடைவதைத் தடுக்க முடியாது. எமது நாட்டில் சிறுபான்மை மக்கள் எதைக் கேட்கிறோம். ஏனைய மக்களோடு ஒற்றுமையாக வாழவே விரும்புகின்றோம். ஜனாதிபதி, பிரதமர் மீது நம்பிக்கை வைத்தே எமது மக்கள் ஆதரவளிப்பார்கள். இதுதான் நல்லிணக்கமா? இதுதான் நல்லாட்சியா? ஏனக் கேட்க விரும்புகின்றேன்.