Breaking
Sun. Dec 22nd, 2024
மனித உணர்வுகளை அறியும் கணினி மென்பொருளை வங்கதேச விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
வங்கதேசத்தின் இஸ்லாமிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இதனை உருவாக்கியுள்ளனர்.
இது பற்றி அந்தப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஏ.எஃப்.எம். நஜ்முல் ஹக் நஹின் கூறியது:
கணினியைப் பயன்படுத்துபவர்களைக் கொண்டு இரண்டு விதத்தில் மனித உணர்வுகளை அறிந்து கொள்ளலாம். விசைப்பலகை பயன்பாடு, அதனைக் கொண்டு உருவாக்கும் எழுத்து அல்லது உரை வடிவம் ஆகியவற்றை ஆய்வு செய்வதன் மூலம் மனித உணர்வுகளை அறியலாம். முதல் முறையாக, இந்த இரு முறைகளையும் உள்படுத்தி ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதற்கென தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்வலர்கள் ஒரு குறிப்பிட்ட உரைநடைச் செய்தியை கணினியில் பதிவு செய்ய பணிக்கப்பட்டனர். அப்போதைய அவர்கள் மனநிலையை அவர்கள் குறித்து வைத்துக் கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்பட்டனர். இடையிடையே, அவர்கள் தாமாக கணினியைப் பயன்படுத்தவும் அனுமதிக்கப்பட்டனர்.
மகிழ்ச்சி, கோபம், அச்சம், சோகம், வெறுப்பு, வெட்கம், குற்ற உணர்ச்சி ஆகிய ஏழு உணர்வுகளுடன் தொடர்புடைய பல்வேறு சொற்களும் வரிகளும் அடங்கிய சொற்களஞ்சியத்துடன் ஆர்வலர்கள் பதிவு செய்த விவரங்களும் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டன.
இந்த ஆய்வுக்குப் பிறகு, கண்ட முடிவுகளில் மகிழ்ச்சி, கோபம் ஆகியவற்றை அதிகபட்சமாக சரியாக கணிக்க முடிந்தது என்று அவர் கூறினார்.
இதனைக் கொண்டு மனித உணர்வுகளை அறிய உதவும் மென்பொருளை உருவாக்க முடிந்தது. கணினி விளையாட்டுகள், கணினி மூலம் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்த ஆய்வு பயன்படும் என்றார் அவர்.

Related Post