அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கறுப்பின இளைஞர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து மிகப் பெரிய அளவிலான போராட்டங்களும் வன்முறைகளும் தொடர்கின்றன.
கறுப்பினத்தவரின் கோபத்தால் பால்டிமோர் நகரமே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது… அமெரிக்காவில் போலீசாரின் தாக்குதலில் கறுப்பின இளைஞர்கள் படுகொலையாவதும் இதற்கு எதிரான போராட்டங்கள் வெடிப்பதும் தொடர் கதையாகி வருகிறது.
அண்மையில் பால்டிமோர் நகரில் ப்ரெட்டி கிரே என்ற கறுப்பின இளைஞர் ஒருவரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்று மிகக் கொடூரமாக தாக்கியுள்ளனர். இந்நிலையில் அந்த இளைஞர் 2 வாரங்களுக்கு முன்னர் உயிரிழந்துவிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த கறுப்பின மக்கள், பால்டிமோர் நகரில் தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கண்ணில் தென்படும் போலீசார் வாகனங்களை அடித்து நொறுக்குகின்றனர்.. இதில் போலீசார் பலரும் படுகாயமடைந்துள்ளனர். வணிக வளாகங்கள் தீ வைக்கப்பட்டு சூறையாடப்படுகின்றன. வன்முறையை கட்டுப்படுத்த போலீசாரும் கடும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த போராட்டங்கள் தொடருவதால் அங்கு காலை முதல் மாலை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அண்டை மாகாணங்களில் இருந்தும் பாதுகாப்புப் படையினர் பால்டிமோரில் குவிக்கப்பட்டு வருகின்றனர்.