மேல் மாகாணத்தில் ஆசிரியர்களுக்கான பரீட்சையில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, இலங்கை ஆசிரியர் சேவையாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
குறித்த பரீட்சைகள் இடம்பெற்று இரண்டு வருடங்களாகின்ற போதும், அவர்களுக்கு நியமனம் வழங்க, நிதி அமைச்சின் முகாமைத்துவ திணைக்களம் அனுமதியளிக்கவில்லை என, குறித்த சங்கத்தின் பிரதம செயலாளர் மஹிந்த ஜெயசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த நியமனங்களை வழங்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என, நிதி அமைச்சுக்கு வலியுறுத்தி, மேல் மாகாண பட்டதாரிகள் ஒன்றியத்துடன் இணைந்து பேரணி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இந்தநிலையில் தற்போது குறித்த பேரணி கொழும்பு – கோட்டையில் ஆரம்பமாகி நிதி அமைச்சு வரை செல்ல முற்பட்டுள்ளமையால், லோட்டஸ்ட் டவர் ஆரம்ப பகுதியில் பொலிஸாரால் தடைகள் போடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனால் அப் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதுஇவ்வாறு இருக்க, இலங்கை ஆசிரியர் சேவையாளர்கள் சங்கத்தின் தலைவர் லால் குமார உள்ளிட்ட குழுவினர், தற்போது நிதி அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடலில் ஈடுபட, அமைச்சுக்கு சென்றுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.