Breaking
Sat. Jan 11th, 2025
கிழக்கு மாகாணத்தில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறை எதிர்வரும் மாதங்களில் நிவர்த்தி செய்யப்படும் என்பதுடன், மாகாணத்தில் காணப்படும்  கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் ஆகிய பாடங்களைக் கற்பிக்கக்கூடிய 1,134 பட்டதாரிகள் ஆசிரியர்களாக நியமனம்  செய்யப்படவுள்ளதாக  கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி தெரிவித்தார்.
மட்டக்களப்பு, ஏறாவூர் கலைமகள் மகா வித்தியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை  நடைபெற்ற விஞ்ஞானத் தொழில்நுட்ப ஆய்வுகூடத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும், பின்தங்கிய பிரதேசப் பாடசாலைகளின் அனைத்துப் பிரச்சினைகளையும், தேவைகளையும் ஒரே தடவையில் பூர்த்திசெய்வது என்பது சவால் நிறைந்தது அத்தோடு, முடியாத ஒரு காரியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
 இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், ஆசிரியர்கள் மற்றும் பௌதீகவளத் தேவைகளை பாடசாலை நிர்வாகங்கள் கேட்கும்போது, அத்தேவைகளை நிவர்த்தி செய்யவே நாங்கள் முற்படுகிறோம். ஆனால், நடைமுறையில் சாத்தியமற்றதாகிப் போகும் அளவுக்கு எம்மிடம் நிதிப் பற்றாக்குறை உள்ளது. இருந்தபோதிலும், ஏதோவொரு வகையில் ஒழுங்குகளைச் செய்து பாடசாலைகளின் தேவைகளை பூர்த்தி செய்வதுடன், பிரச்சினைகளையும் தீர்த்துக்கொண்டே இருக்கிறோம்.
பாடசாலைகளின் பிரச்சினைகளை மாத்திரம் முன்னுரிமைப்படுத்திக்கொண்டு பாடசாலை நிர்வாகங்களை முடங்கச் செய்ய முடியாது.  பாடசாலை அதிபர்கள் முகாமையாளர்களாக கருதப்படுகின்றனர். ஆகவே, அதிபர்கள் தங்களின் பாடசாலைகளில் உள்ள வளங்களை உச்ச அளவில் பயன்படுத்தி அதன் பயனை மாணவர்கள் அனுபவிப்பதற்கு வழி செய்ய வேண்டும். என கூறினார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடாக் கல்வி வலயமானது ஆசிரியர் பற்றாக்குறையால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய கல்வி அமைச்சிலிருந்து மாகாணக் கல்வி அமைச்சுக்குக் கிடைக்கக்கூடிய மூலதனச் செலவினங்களைக் கொண்டு சில முன்னுரிமைப்படுத்த வேண்டிய பாடசாலைகளைத் தெரிவுசெய்து அவற்றுக்கான கட்டடங்கள் உட்பட வசதிகளை நாங்கள் செய்துகொண்டிருக்கின்றோம்’ எனவும் அவர் மேலும் கூறினார்.

By

Related Post