Breaking
Sat. Jan 11th, 2025
வடமாகாண முஸ்லிம்களின் கௌரவமான குடியேற்றத்தையும் அந்த மக்களுக்கு தலைமை  தாங்கும் அமைச்சர் ரிசாத் பதியுதீனையும் அற்ப சொற்ப சலுகைகளுக்காக ஹூனைஸ் எம்பி காட்டிக் கொடுத்து விட்டதாக முசலி பிரதேச சபைத் தவிசாளர் எஹ்யாபாய் குற்றம் சுமத்தியுள்ளார்.
வன்னி மாவட்ட அ.இ.ம.கா நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறுக் இன்று ஐ.தே.க வில் இணைந்து கொண்டமை தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையிலேயே தவிசாளர் எஹ்யா பாய் மேற்படி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
வடக்கு முஸ்லிம்களுக்கும் அந்த மக்களின் தலைவரான அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கும், அ.இ.ம.கா கட்சிக்கும் ஹுனைஸ் எம்பி  பாரிய துரோகம் இழைத்து விட்டதாகவும் எஹ்யாபாய் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முசலி பிரதேச சபைத் தவிசாளர் எஹ்யா பாய் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும்  தெரிவிக்கப்பட்டுள்ளமை வருமாறு:
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் எந்த வேட்பாளருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் பல தடைவ அ.இ.ம.கா கட்சி கூடி ஆராயந்து இதுவரை எந்தவொரு தீர்மானத்திற்கும் வரவில்லை.
எதிர்வரும் 29ம் திகதி கூடவுள்ள அ.இ.ம.கா வின் உயர்பீட கூட்டத்திலேயே தேர்தல் தொடர்பிலும் எந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பிலும் விரிவாக ஆராயப்படவுள்ளது.
இவ்வாறான நிலையில், கட்சிக்கோ, கட்சித்தலைமைக்கோ வாக்களித்த மக்களுக்கோ பொறுப்புக் கூறாமலும் அவர்களது அனுமதியின்றியும் இவ்வாறு ஹூனைஸ் எம்பி தான்தோன்றித் தனமாக கட்சி மாறியிருப்பது வடமாகாண மக்களுக்கும் நாடு பூராகவுமுள்ள முஸ்லிம்களுக்கும் பெரும் வேதனையையும்  சந்தேகத்தையும் தோற்றிவித்துள்ளது.
வடமாகாண முஸ்லிம்களின் கௌரவமான குடியேற்றத்திற்கும் அந்த மக்களின் பாதுகாப்பான இருப்புக்காகவும் கட்சியும் கட்சித் தலைமையும் போராடிக் கொண்டிருக்கும் இன்றைய நிலையில்  ஹூனைஸ் எம்பி கட்சி தாவியிருப்பது அவரது சுயநலத்தையும் பணமோகத்தையும் அச்சொட்டாக எடுத்துக்காட்டுகின்றது.
வடமாகாண முஸ்லிம்களின் இருப்புக்கு எதிரான கோட்பாட்டைக் கொண்ட குழுக்களுடன் கூட்டுச் சேர்ந்து பிரதியமைச்சர் பதவி மோகத்திற்காக இற்றைக்கு 06 மாதங்களாக வாக்களித்த மக்களையும் அரசியல் வழிகாட்டியான அமைச்சர் ரிசாதையும் தூக்கியெறிந்து விட்டு ஆலாய்ப் பறந்த ஹூனைஸ் எம்பி , இறுதியில் பிரதியமைச்சர் பதவி கிடைக்காமல் போனமையை அடுத்தே அதற்கு நிகராகவும் அதைவிட மேலாகவும் பேசப்பட்ட பேரப்பேச்சுக்கு அடிமையாகி இன்று ஐ.தே.கவுடன் சங்கமமாகியுள்ளார்.
இது தான் அவர் கட்சியை விட்டும் கட்சித் தலைமையை விட்டும் வாக்களித்த மக்களை தூக்கிnறிந்து விட்டும் ஐ.தே.க வுடன்  கூட்டுச் சேர்வதற்கு  பிரதான காரணமாகும். இதனை அவரது மனச்சாட்சி உறுதி செய்யும் என்பதில்; சந்தேகமில்லை.
இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பிற்பாடு முசலி என்ற பெரும் நிலப்பரப்புக்கு அமைச்சர் ரிசாதின் சாணக்கியத்தின் மூலம் கிடைத்த முதலாவது எம்பியாக ஹூனைஸ் எம்பி திகழ்ந்தார். முசலிக்கு இந்த கௌரவத்தையும் அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்த பெருமை அ.இ.ம.கா தேசியத் தலைவரான அமைச்சர் ரிசாத் பதியுதீனையே சாரும்.
முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்தில் சாதாரண இலிகதராக பணியாற்றி, சுமார் 20 வருடங்களுக்கு மேலாக கொழும்பில் வசித்து வந்த   ஹூனைஸ் என்பவரை, வடமாகாண முஸ்லிம்களுக்கே அடையாளம் தெரியாமல் இருந்த  இந்த ஹூனைஸை அரசியலுக்குள் புகுத்தி கௌரவ உயர் சபைக்கு கொண்டு சென்றவர் அமைச்சர் ரிசாத் பதியுதீன் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை
இவரை கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளராக நிறுத்திய போது, இவர் யார்? இவர் இந்த கட்சிக்காகவும் ,வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்திற்காகவும், உங்களின் அரசியல் பணிக்காகவும் (அமைச்சர் ரிசாத்) என்ன உதவி ,ஒத்தாசை ,பங்களிப்புச் செய்தார் என்று அமைச்சர் ரிசாதை நோக்கி கட்சிப் போராளிகள் அன்று கைநீட்டிய போது அவர்களது கேள்விகள் ,கொந்தளிப்புக்கள் எல்லாவற்றையும் செவிமடுத்து இறுதியில் தலைவரின் விருப்புக்காக அந்த முடிவை கடசிப் போராளிகள் விட்டனர். அதன் பிற்பாடே தலைவர் ரிசாத் பதியுதீன் , ஹூனைஸை வேட்பாளராக இறக்கினார்.
 அதுமட்டுமன்றி கட்சி உயர்பீடத்தின் விருப்பை பல போராட்டத்திற்கு மத்தியில் பெற்றும் எடுத்தார்.
தேர்தல் வேளையின் போது ‘ எனக்கு வாக்களிப்பளிப்பதென்றால் இங்கிருக்கின்ற அ.இ.ம.கா வேட்பாளர்களான ஏனைய இருவருக்கும் வாக்களிக்க  வேண்டும் என்று மக்களிடம் மன்றாட்டமாக வேண்டினார். அல்லாஹ்வின் உதவியை முதற்கொண்டு அமைச்சர் ரிசாதின் முயற்சியினால்  இந்த ஹூனைஸ் எம்பியானார்.
அன்று இவரை எம்பியாக்க முயற்சி செய்த  அமைச்சர் ரிசாதின் வாயை இன்று மூட வைத்தது மட்டுமன்றி முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தையும் கேள்விக்குறியாக்கி ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் காட்டிக் கொடுத்துவிட்டர்.
முஸ்லிம்கள் காட்டிக் கொடுப்பவர்கள் என்ற பேரீனவாத சமுகத்தின் வாய்ப்பேச்சை ஹூனைஸ் எம்பி இன்று செய்துள்ள கட்சித் தாவலின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது மட்டுமன்றி பணத்திற்காக முஸ்லிம்கள் எதையும் செய்வார்கள் என்ற அவப்பெயரையும் இன்று அவர் ஏற்படுத்தி விட்டார்.
வடக்கு முஸ்லிம்களின் இன்னல் நிறைந்த வாழ்க்கையை தகர்தெறிந்து அவர்கள் வசித்த குடிசைகளை கல்வீடாக்கி பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தன்னந்தனியே போராடி வரும் அமைச்சர் ரிசாதுக்கு , இன்று ஹூனைஸ் எம்பி செய்துள்ள செயற்பாட்டை பார்க்கும் போது ஹூனைஸ் எம்பியை ஒரு துரோகி என்றாலும் மிகையாகாது.
இன்று அவர் செய்துள்ள துரோகத்திற்கு, குறிப்பாக முசலி மக்களுக்கும் பொதுவாக வடமாகாண முஸ்லிம்களுக்கும் ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்திற்கும் நிச்சயமாக அவர் பதில் கூறித்தான் ஆக வேண்டும்.
நன்றிகெட்டத் தனமாக நடந்துள்ள ஹூனைஸ் எம்பிக்கு வன்னி மாவட்ட முஸ்லிம்கள் நல்லதொரு பாடத்தை மிக விரைவில் புகட்டுவார்கள் மட்டுமன்றி இந்த துரோகத்தனத்திற்கு இறைவனும் தகுந்த தீர்ப்பை வழங்குவான் என்பதிலும் எந்தச் சந்தேகமும் கிடையாது. என்றும் முசலி பிரதேச சபைத் தவிசாளர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post