வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் இன்று (5) முதல் கடமைக்குத் திரும்ப வேண்டும் என அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு இன்று பணிக்கு திரும்பாத ஊழியர்கள் பணியில் இருந்து நீங்கியவர்களாக கருதப்படுவார்கள் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் டீ சில்வா குறிப்பிட்டுள்ளார்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்குறிப்பிட்ட விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.இந்நிலையில் அரசாங்கத்தின் இந்த செயற்பாடுகளால் தமது தொழிற்சங்க நடவடிக்கையை நிறுத்தப் போவதில்லை என, பல்கலைக்கழக தொழிற்சங்க சம்மேளனத்தின் ஒன்றிணைந்த குழு ஊடகப் பேச்சாளர் கே.எல்.டீ.ஜீ. ரிஜ்மண்ட் தெரிவித்திருந்தார்.
கடந்த இரு வாரங்களுக்கு மேலாக பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் தங்களுக்கு அதிகரிக்கப்பட்ட 2,500 ரூபா கொடுப்பனவை அடிப்படை சம்பளத்துடன் சேர்ப்பது உள்ளிட்ட 7 முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஜூலை மாதம் 14ஆம் திகதியிலிருந்து ஆர்ப்பாட்டங்களிலும் தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். அத்தோடு குறித்த பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பினால் தங்களின் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பல்கலைக்கழகங்களின் நூல் நிலையங்கள் மூடப்பட்டிருந்தமையினால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது. கொழும்பு பல்கலைக்கழகம், பேராதனைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட நாட்டிலுள்ள பல பல்கலைக்கழகங்களிலும் நேற்றும் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.