துபாயில் பணியாற்றும் லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அங்கு பணியின் போது காயமடையும் ஊழியர்களுக்கு சிகிச்சை காலமான 6 மாதங்கள் வரை முழு சம்பளம் வழங்க வேண்டும் என துபாய் கோர்ட் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
கடந்த ஆண்டு துபாயில் நடைபெற்ற ஒரு சாலை விபத்தில் பஸ் மோதியதில் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த காரின் டிரைவர் காயமடைந்தார். பஸ் இன்சூரன்ஸ் செய்யப்பட்டிருந்த நிறுவனம் அந்த கார் டிரைவருக்கு 90 ஆயிரம் திர்ஹம்களை இழப்பீடாக வழங்க வேண்டும் என கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், இந்த தீர்ப்பை எதிர்த்து அந்நாட்டின் தலைமை நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி விபத்தில் காயமடைந்த தொழிலாளிக்கு இன்சூரன்ஸ் நிறுவனத்தின் இழப்பீட்டை நம்பி இருக்காமல், அவருக்கு வேலை வழங்கும் நிறுவனம் சிகிச்சை காலத்துக்கான 6 மாத முழு சம்பளத்தையும், அதற்கடுத்தடுத்த மாதங்களுக்கு அரை மாத சம்பளத்தையும் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.