Breaking
Mon. Dec 23rd, 2024

– ஊடகப்பிரிவு-

கூடுதலாக கோரிக்கையுள்ள நாட்டரிசி பல விலைகளில் விற்பனை செய்யப்படுவதனால், அதனை கட்டுப்பாட்டு விலைக்கு கொண்டு வர வேண்டுமென கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கூறியுள்ளார். அண்மையில் நடாத்தப்பட்ட வாழ்க்கைச் செலவு குழு கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது, உள்நாட்டில் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட நாட்டரிசி ஒரு கிலோவின் ஆகக்கூடிய விலை ரூபா.74 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தற்போது லங்கா சதொசவில் ஒரு கிலோ நாட்டரிசி ரூபா. 70 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று தற்போது ஒரு கிலோ சம்பா அரிசி 71 ரூபாவாகவும், வெள்ளை பச்சை அரிசி 62 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த அரிசிவகை இரண்டினதும் விலை எதிர்வரும் வாரத்தில் குறைக்கப்படாத பட்சத்தில், கட்டுப்பாட்டு விலைக்கு கொண்டுவரப்படும் எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

அத்துடன் வாழ்க்கைச் செலவு குழு அத்தியாவசிய உணவு பொருட்கள் 07 இன் ஆகக்கூடிய விலைகள் பற்றி கலந்தாலோசித்துள்ளது. அதன் விலைகள் கீழே தரப்பட்டுள்ளன.

சம்பா                                              1kg                  ரூ.71.00

நாடு                                                 1kg                  ரூ.74.00

பெரிய வெங்காயம்                1kg                  ரூ.135.00

சீனி                                                  1kg                  ரூ.100.00

கிழங்கு                                           1kg                   ரூ.139.00

செமன் கிராம்                           425 g                 ரூ.127.00

பருப்பு                                            1kg                     ரூ.124.00

நெத்தலி                                        1kg                     ரூ.515.00 ஆகும்

இந்த விலையின் அடிப்படையில் 372 லங்கா சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக, மேலே குறிப்பிடப்பட்ட உணவு பொருட்களை பெற்றுக்கொள்ள முடியுமென்பதுடன், இதே விலையில் ஏனைய சுப்பர் மார்க்கட்களிலும் மேற்கூறப்பட்ட உணவு பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும்.

அதேபோன்று மேற்கூறப்பட்ட 07 அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள், எதிர்வரும் 2018 ஏப்ரல் மாதம் வரை, இந்த ஆகக்கூடிய விலையில் பேணி வருவதற்கு சதொச உள்ளிட்ட ஏனைய சுப்பர் மார்க்கட்களுக்கு வாழ்க்கைச் செலவு குழு அறிவித்துள்ளதாக அமைச்சர் கூறினார்.

அத்துடன், மேற்கூறப்பட்ட 07 அத்தியாவசிய உணவு பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்பவர்களை நுகர்வோர் அதிகார சபை சுற்றிவளைப்பு செய்ய இருப்பதாகவும், அதிக விலைக்கு விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும், அவ்வாறு அதிக விலைக்கு விற்பனை செய்யும் வியாபாரிகள் பற்றிய விபரங்களை நுகர்வோர் அதிகார சபைக்கு முறைப்பாடு செய்யுமாறும் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார்.

 

Related Post