பதவியிலிருந்து ஓய்வு பெற்றதும் சொந்த ஊரான பொலன்னறுவைக்கு சென்று எனது வீட்டில் வசிப்பேனே தவிர ஜனாதிபதிக்கான உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வசிக்க மாட்டேன் எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையின் நிலத்துக்கடியில் உள்ள இரண்டுமாடிக் கட்டட பராமரிப்பு செலவை தவிர்க்க முடியாதுள்ளதாகவும் தெரிவித்தார். இலங்கை பத்திரிகை நிறுவனப் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி மேலும் தெரிவித்திருப்பதாவது,
நான் ஓய்வு பெற்ற பின்னரும் தற்போது நான் பயன்படுத்தும் கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலேயே வசிக்கப்போவதாக பிழையான செய்திகள் வெளிவந்துள்ளதோடு, அந்த உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தை புனரமைப்பதற்கு பெருமளவில் பணம் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் பிரசாரம் முன்னெடுக்கப்படுகின்றது.
இப் பிரசாரங்களில் எந்தவிதமான உண்மையும் கிடையாது. கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகைக்கு நான் செல்லவில்லை அங்கு வசிப்பதற்கு போயிருந்தால் பராமரிப்பு செலவு மிகவும் அதிகமாகும். அதன் மின்சாரக் கட்டணம் மட்டும் மாதமொன்றுக்கு 150 இலட்சமாகும். எனவே மாளிகையை வைபவங்களுக்கு மட்டுமே பயன்படுத்துகின்றேன். இதற்காக மாதம் 30 இலட்சம் ரூபா மின்சாரத்திற்கு செலவாகின்றது.
இம் மாளிகையின் நிலத்துக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு மாடிக் கட்டடத்தை பராமரிப்பதற்கான செலவு தவிர்க்க முடியாத செலவாகவுள்ளது.ஜனாதிபதி மாளிகையில் மட்டுமல்ல அதனோடு தொடர்புபட்ட ஏனைய நிறுவனங்களினதும் வீணான செலவுகள் நிறுத்தப்பட்டுள்ளன என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.