கில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை நாடளாவிய ரீதியில் சகல பிரதேசங்களிலுமுள்ள துறைசார் நிபுணர்கள், புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் உலமாக்களிடமிருந்து புதிய அரசியலமைப்புக்கான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பெற்றுக் கொள்ளவுள்ளது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் கிளைகள் மூலம் இந்தப்பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவுறுத்தல்களை உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ.முபாரக், உலமா சபையின் கிளைகளின் செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ளார்.
நாடெங்குமுள்ள உலமா சபைகளிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படும் ஆலோசனைகள் ஒன்றாகத் தொகுக்கப்பட்டு அரசியல் யாப்பு வரைபுக் குழுவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இது தொடர்பாக உலமா சபையின் பொதுச் செயலாளர், உலமா சபையின் கிளை செயலாளர்களுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் உத்தேச புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவது தொடர்பான பிரேரணையொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த கால கசப்பான அனுபவங்களை மறந்து நாடு முன்னேற வேண்டுமெனில் மூன்றாவது அரசியலமைப்பு முக்கியமானதாகும். இந்த அரசியலமைப்பே இனங்களுக்கிடையில் உறவுகளை ஏற்படுத்தும். எனவே புதிய அரசியலமைப்பின் ஊடாகவும் புதிய உறவுகளை ஏற்படுத்துவதன் ஊடாகவும் தீர்வுக்கான ஆரம்பத்தை உருவாக்க வேண்டும்.
அதற்கு அரசியலமைப்பு மாற்றம் அவசியமானதாகும் என்ற யதார்த்தத்தின் கீழே இந்தப் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தேச புதிய அரசியலமைப்புக்கான ஆலோசனைகளை பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொள்வதற்காக ஒரு குழுவை அரசு அமைத்துள்ளது.
இக்குழு ஒவ்வொரு பிரதேசங்களுக்கும் சென்று அந்தப் பிரதேச மக்களின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளவுள்ளது.
அதனால் குறித்த இக்குழு தங்களது பிரதேசங்களுக்கு சமுகமளிக்கும் போது சந்தர்ப்பத்தைத் தவறவிடாது முன்கூட்டியே தங்களது பிரதேசங்களிலுள்ள துறைசார்ந்தவர்களுடன் இணைந்து உத்தேச புதிய அரசியலமைப்புக்கான ஆலோசனைகளைத் தொகுத்து வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஜம்இய்யா வேண்டுகோள் விடுக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.