பதிவுக்கு உட்படாமல் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்வது சட்டவிரோத ஆட்கடத்தலாகும் என வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.
மஹரகம தேசிய இளைஞர் சேவை மன்றத்தில் நடைபெற்ற இளம் நாடாளுமன்ற அமர்வுகளில் உரையாற்றிய போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
பதிவு செய்து கொள்ளாது சுற்றுலா வீசா மூலம் வீட்டுப் பணிப் பெண்களாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுச் செல்வது சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கையாகவே கருதப்படுகின்றது.
அரசாங்கத்தின் பதிவுக்கு உட்படாது மேற்கொள்ளப்படும் எந்தவொரு வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்லலும் சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களின் பிடியில் சிக்க வாய்ப்பாக அமையக் கூடும்.
கிரமமான முறையில் செல்வதென்றால் மத்திய கிழக்கு மட்டுமன்றி உலகின் வேறு நாடுகளிலும் வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடியும்.
பெண் என்ற ரீதியில் பெண்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்வதனை நான் அனுமதிக்கவில்லை.எனினும் இதற்கு எதிராக சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கவில்லை.
இவ்வாறு வெளிநாடு செல்லும் பெண்களின் குடும்பங்களை பாதுகாக்கும் நோக்கில் சட்டங்கள் இயற்றப்பட்டு வருகின்றன.
வாழ்க்கையை வெற்றி கொள்ளும் நோக்கில் பெண்கள் வெளிநாட்டுக்கு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்லும் பல சந்தர்ப்பங்களில் அவர்களது கணவர் வேறு பெண்களுடன் குடும்பம் நடத்துகின்றனர்.
ஐந்து வயதுக்கும் குறைந்த பிள்ளைகளை உடைய தாய்மார் வீட்டுப் பணிப்பெண்ணாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்ல முடியாது என நாம் சட்டம் அமுல்படுத்தியுள்ளோம்.
இலங்கையில் வடமத்திய மாகாணத்தில் அதிகளவான பெண்கள் வீட்டுப் பணிப் பெண்களாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்கின்றனர்.
பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச் சென்றுள்ள போதிலும் சொற்ப அளவானவர்களே பதிவுக்கு உட்பட்டு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.