பன்னூலாசிரியரும் சிறந்த இலக்கிய ஆய்வாளருமான மணிப்புலவர் மருதூர் ஏ மஜீத் அவர்களின் மறைவு கவலை தருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
சிறந்த மேடைப் பேச்சாளரும், எழுத்தாளரும், கவிஞருமான இவர், இலக்கிய உலகிற்கு எண்ணற்ற பங்களிப்புக்களை நல்கியவர். வெறுமனே எழுத்துலகில் மாத்திரம் அன்னார் ஈடுபாடு காட்டியவரல்லர். பன்முக ஆளுமை படைத்த மணிப்புலவர் நாட்டாரியலில் செய்தளித்திருக்கும் ஆய்வுகள் காலத்தால் அழிக்க முடியாதவை மாத்திரமின்றி, எதிர்கால சந்ததிக்கு சிறந்த இலக்கியப் பதிவுகளாகவும் அமைகின்றன.
அவரது சிறுகதைகள் எப்பொழுதுமே வித்தியாசமான கதாபாத்திரங்களை கொண்டவையாக இருக்கும். மக்களின் துன்பங்களையும், பிரச்சினைகளையும் கோடிட்டுக் காட்டுபவையாக அவரது ஆக்கங்கள் இருப்பதனாலேயே அவர் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார்.
கல்வித்துறையில் சிறந்த ஆசானாக விளங்கிய மணிப்புலவர், கல்விப் பணிப்பாளராகவும் பணியாற்றி இருக்கின்றார். இலங்கை வானொலியில், பல்வேறு சுவாரஷ்யமான நிகழ்ச்சிகளை வழங்கிய அன்னார், நல்லதொரு மேடைப்பேச்சாளர். அன்னாரின் மறுமை வாழ்வுக்காகப் பிரார்த்திப்போம்.