பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு மாற்றீடாக அறிமுகப்படுத்தப் படவுள்ள புதிய சட்ட ஏற்பாடு முஸ்லிம்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமையவுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சட்டப்பிரிவின் பணிப்பாளர் சட்டத்தரணி றுஸ்தி ஹபீப் தெரிவித்தார்.
பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு மாற்றீடாக அறிமுகப்படுத்தப் படவுள்ள சட்ட ஏற்பாடு தொடர்பில் வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தற்போது அமுலிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி அதற்குப் பதிலாக மற்றுமொரு சட்ட ஏற்பாட்டை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கான சட்ட வரைபுப் பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அந்தச் சட்ட வரைபு இறுதிக்கட்டத்தை அடையாதபோதிலும் தற்போதைய வரைபின் பிரகாரம் அது முஸ்லிம்களை பாதிக்கும் வகையில் உள்ளது. பயங்கரவாத தடைச்சட்டம் தமிழ் மக்களின் விடயத்தில் பாதிப்பை ஏற்படுத்தியதுபோல் புதிய சட்ட வரைபின் பிரகாரம் அது முஸ்லிம்களை பாதிக்கவுள்ளது.
பயங்கரவாதத் தடைச்சட்டம் அப்பாவித் தமிழ் மக்கள் மீது அழுத்தம் பிரயோகிப்பதால்தான் அச்சட்டம் மாற்றப்படுகிறது.
எனவே அதற்குப் பதிலாக அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய சட்ட ஏற்பாடு மற்றுமொரு சாதாரண சமூகத்தை பாதிக்குமாயின் அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஆகவே அறிமுகப்படுத்தவுள்ள புதிய சட்ட ஏற்பாடு எந்தவொரு சாதாரண மக்களையும் பாதிக்காத வகையில் அமைய வேண்டும்.
அது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அவதானம் செலுத்தியுள்ளதுடன் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.