பயங்கரவாத தடைச் சட்டத் திருத்தத்தில் எந்த விதமான மாற்றங்களையும் நாம் காணவில்லை எனவும், இதன்மூலம் சர்வதேசத்தை ஏமாற்றி விட முடியும் என்று நினைக்காமல் பாதிக்கப்பட்டவர்களின் நலன்களை முன்னிறுத்தி, ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வதே காலத்தின் தேவை எனவும் மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான சட்டமூலம், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸினால் இன்றையதினம் (10) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன்போது உரையாற்றிய ரிஷாட் எம்.பி மேலும் கூறியதாவது,
“இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ள பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பான திருத்தத்தை நான் வாசித்துப் பார்த்தேன். அதில் எந்தவொரு பெரிய மாற்றத்தையும் நான் காணவில்லை. ஒரே ஒரு விடயத்தில் மாத்திரம்தான் அதாவது, சந்தேகநபர் ஒருவரை மூன்று மாத காலம் என்ற அடிப்படையில், 18 மாத காலம் தடுத்து வைப்பதற்கு பாதுகாப்பு அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை 12 மாதங்களாக குறைத்துள்ளனர். இது மாத்திரம்தான் நாம் இங்கே காண்கின்ற மாற்றமாகும்.
ஆனால், அதன் பின்னர், பிரிவு 7 இன் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பவர்களாக இருந்தால், வழக்கு முடியும்வரை அவர்களை சிறையில் வைக்க முடியும். எந்தவொரு நீதிமன்றத்துக்கும் அதன் பிறகு பிணை வழங்கும் அதிகாரம் கிடையாது. அவ்வாறான பாணியிலேதான் இந்தத் திருத்தம் இருக்கின்றது.
எனவே, சுமார் 18 அல்லது 20 வருடங்களாக தமிழ் இளைஞர்கள் இந்தப் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் வாடுகின்றனர். அவர்கள் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் அல்லது வழக்கு முடியாமல் சிறையிலே வாடுகின்றனர். நான் சிறையில் இருந்த போது இதனைக் கண்ணால் கண்டேன். ஆயுதம் ஏந்திய போராளிகள் பலர் மன்னிப்பு வழங்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட்ட பின்னரும் சமூகவலைத்தளங்களில் சில விடயங்களை பகிர்ந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் மீண்டும் சிறைவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, வருடக் கணக்கில் சிறையில் உள்ளனர். அவ்வாறனவர்களுக்கு இந்த திருத்தச் சட்டத்தில் எந்தவிதமான நிவாரணங்களும் வழங்கப்படவில்லை.
சஹ்றான் என்ற நயவஞ்சகன் செய்த பாதகச் செயலினால், முழு முஸ்லிம் சமூகமும் தலைகுனிந்து நிற்கின்றது. பொருளாதார ரீதியிலும் பல்வேறுபட்ட விவகாரங்களிலும் ஏகப்பட்ட பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றது.
இருபது வருடங்களுக்கு மேலாக பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பிரதிநிதித்துவம் செய்யும் என்னையும், எந்தவிதமான காரணமும் இன்றி பல மாத காலம் சிறையில் அடைத்தனர். குண்டுத் தாக்குதலை காரணமாக வைத்து இந்த நடவடிக்கையை எடுத்தனர். எனவே, இந்தச் சட்டத்துக்கு எல்லோருமே பலியாகி வருகின்றனர். பாதுகாப்பு அமைச்சர் நினைத்தால் கையொப்பத்தை இட்டு, சந்தேகம் என்று சிறையில் வைக்க முடியும் என்ற இந்தச் சட்டம் நாட்டுக்கு ஒரு சாபக்கேடு.
சிரேஷ்ட சட்டத்தரணியான ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் நேற்று பிணையில் விடுதலை செய்யப்பட்டார். அவரைக் குற்றவாளியாக ஆக்க வேண்டும் என்பதற்காக, சகீன் மௌலவி என்ற புத்தளம் கரம்பையை சேர்ந்த ஒருவரையும், கனமூலையைச் சேர்ந்த லுக்மான் மௌலவி மற்றும் வசீர் மௌலவி என்பவர்களையும் கைது செய்தனர். இவர்கள் புத்தளம் கரத்தீவில் உள்ள அரபுக் கல்லூரி ஒன்றில் கற்பித்து வந்தவர்கள். சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் 2018 இல் அங்கு சென்று மார்க்கப் பிரச்சாரம் செய்ததாக மாணவர் ஒருவர் சாட்சியளித்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே, இவர்கள் அனைவரையும் கைது செய்து ஒரு வருடத்துக்கு மேலாக இன்னுமே வைத்திருக்கின்றனர். அவர்கள் சிறையில் இருந்தபோது, “ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, இந்த அரபுக் கல்லூரிக்கு வருகை தந்திருந்தார்” என்று சொன்னால் உங்களை விடுதலை செய்வோம். இல்லாவிட்டால் 10 அல்லது 15 வருடங்கள் நீங்கள் சிறையிலே வாட வேண்டி நேரிடும் என்று, அங்கு வந்திருந்த சி.ஐ.டி உத்தியோகத்தர்கள் பலவந்தப்படுத்திய போதும், அவர்கள் மறுப்புத் தெரிவித்து, ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை கண்ணால் காணவே இல்லை என்று கூறியிருந்தார்கள்.
அண்மையில் சில பெண்கள் கைது செய்யப்பட்டனர். ஒருவர் நான்கு மாத கர்ப்பிணித்தாய். மற்றையவர் நான்கு மாதக் குழந்தை உள்ள தாய். அத்துடன், ஒரே குடும்பத்தில் நான்கு பிள்ளைகள் இவ்வாறு அநியாயமாகக் கைது செய்து, அவர்களிடமிருந்து பொய்யான வாக்குமூலங்களை பெற முயற்சிக்கின்றனர். ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை பழிவாங்க வேண்டும் என்பதற்காக இவ்வாறான அப்பாவிகளை கைது செய்துள்ளனர். இவர்கள் வழக்கு பேசுவதற்கு கூட எந்தவிதமான வழியும் இல்லாத ஏழைகள்.
இவ்வாறு இந்த குண்டு வெடிப்புக்கு பின்னர் 300 க்கும் மேற்பட்வர்த்கள் கைது செய்யப்பட்டனர். 25 பேர் அளவிலேயே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏனையவர்கள் சிறையிலே வாடுகின்றனர். “இவர்கள் குற்றவாளிகளாக இருந்தால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுங்கள்” என சட்டமா அதிபர் திணைக்களத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றோம். வெறுமனே, இவர்களை சிறையில் அடைத்து உங்கள் சொந்த இருப்புக்களை பாதுகாக்க நினைக்காதீர்கள்.
குற்றஞ்செய்தவர்கள் எவராயினும் தண்டிக்கப்பட வேண்டும். அதற்காக அப்பாவிகளை, அதிகாரங்களை பயன்படுத்தி அநியாயமாக பழிவாங்குவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
பயங்கரவாத தடைச் சட்ட திருத்தம் என்ற போர்வையில் ஒன்றைக் கொண்டு வந்து, ஐரோப்பிய ஒன்றியத்தை அல்லது சர்வதேசத்தை ஏமாற்றலாம் என்று நினைக்காமல், சர்வதேச சட்டங்களையும் நியமங்களையும் மதித்து, மக்கள் ஏற்றுக்கொள்ளும் முறையில் அவர்களைப் பாதுகாக்க, சட்ட நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுங்கள்.
ஆசாத் சாலியின் கைதும் விடுதலையும் இதற்கு நல்ல சான்றாக இருக்கின்றது. இந்தச் சட்டத்தினால் நானும் பாதிக்கப்பட்டிருக்கின்றேன். எனது சகோதரர் உட்பட எந்தவிதமான குற்றமும் செய்யாத அப்பாவி தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் பாதிக்கப்பட்டனர். இன்னும் பலர் பலவருடங்களாக சிறையில் வாடுகின்றனர். இவர்களை நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்து குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யுங்கள்.
அத்துடன், “ஒரே நாடு, ஒரே சட்டம்” என்ற செயலணிக்காக நியமிக்கப்பட்டுள்ள தலைவரை தயவு செய்து மாற்றுங்கள். அவரை வைத்து எதிர்காலத்தில் அரசியல் செய்யலாம் என நீங்கள் நினைத்தால். அது ஒரு பெரிய ஆபத்தை உருவாக்கும். அத்துடன், சிறுபான்மையை அச்சப்படுத்துவதற்காகவும், பெரும்பான்மையை சந்தோசப்படுத்துவதற்காகவும் இவ்வாறான மோசமான கைங்கரியங்களை செய்ய வேண்டாம் எனக் கோருகின்றேன். மேலும், “ஒரே நாடு, ஒரே சட்டம்” என்ற செயலணி நாட்டுக்கு அவசியம் என நீங்கள் கருதினால், நல்லதொரு தலைவரை நியமித்து, எல்லா இனங்களையும் பாரபட்சமின்றி நடத்துவதற்கான செயன்முறைகளை மேற்கொள்ளுங்கள். அதற்காக நாங்களும் ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளோம்” என்று கூறினார்.