அப்பாவிகள் என்ற வேஷம் போடுவதனால் செய்த குற்றங்களை மறைக்க முடியாது. ராஜபக்சக்கள் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள விடயங்கள் மட்டுமல்ல கடந்த ஆட்சியில் நடந்த அனைத்து மோசடிகளையும் கண்டறிவதுடன் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
நிதி மோசடி குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதியின் மகன் யோஷித ராஜபக்சவை விடுவிக்கக் கோரியும் அந்த விவகாரம் தொடர்பில் பல கருத்துக்களை மஹிந்த அதரவு அணியினர் முன்வைத்து வரும் நிலையிலும் இது தொடர்பில் அரசாங்கத்தின் கருத்தை அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
குற்றம் புரிந்த காரணத்தினால் தான் குற்றவாளிகள் என்ற அடிப்படையில் நபர்கள் கைது செய்யப்படுகின்றனர். கடந்த ஆட்சியில் மோசமான வகையில் நிதி மோசடிகள் மற்றும் சொத்து குவிப்பு போன்ற வழக்குகளில் யோஷித்த ராஜபக்ச கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவர் மட்டுமல்ல, மேலும் பலரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதேபோல் ஆளும் கட்சியின் நபர்கள் கூட கடந்த காலத்தில் குற்றச்சாட்டுகளின் அடிப்படியில் கைது செய்யபட்டு தண்டிக்கப்பட்டனர்.
ஆகவே இந்த ஆட்சியில் ஜனநாயகத்துக்கு முரணான வகையில் நாம் செயற்படவில்லை. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களை தண்டிக்க வேண்டிய கடமை எமக்குள்ளது.
எனினும் தாம் செய்த குற்றத்தை மறைக்கும் வகையில் அரசியல் கைதிகள் என்ற சாயம் பூசியும் தம்மை ஜனநாயக வாதிகள் என்று காட்டிக்கொள்ள முயற்சிப்பதும் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.
இப்போது இவர்கள் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தவும் பலமாக அமைக்கப்பட்டிருக்கும் நல்லாட்சியை குழப்பும் வகையிலும் செயற்பட நினைக்கின்றனர்.
ஆனால் இவர்கள் என்ன மாயஜாலம் செய்தாலும், நல்லவர்கள் போல் நடித்தாலும் அதன் மூலமாக எமது ஆட்சியை வீழ்த்தவோ அல்லது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தவோ முடியாது.
பதிலடிக்கு பயந்து ஓடி ஒழிய இந்த அரசாங்கம் தயாராக இல்லை. மஹிந்த ராஜபக்ச நாட்டில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த தலைவர். மாற்றம் ஒன்றை ஏற்படுத்திய தலைவர் என்ற கருத்துள்ளது. அதே பங்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் உள்ளது.
எனினும் மஹிந்த செய்த தவறுகள் தொடர்பிலும் நாம் ஆராய்ந்து கொண்டிருக்கின்றோம். மஹிந்த குடும்பம் மாத்திரம் அல்ல, கடந்த ஆட்சியில் ஊழல் மோசடிகள் மேற்கொண்டதாக தகவல் கிடைத்துள்ள பலர் மீது விசாரணைகள் நடத்த அரசாங்கம் தயாராகவுள்ளது.
ஆகவே இதில் தனிப்பட்ட பழிவாங்கல் நடவடிக்கைகள் எவையும் இல்லை.
மேலும் நல்லாட்சி அரசாங்கம் நடத்தும் அரச நிகழ்வுகளில் அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் கட்சி பேதமோ, இன மத பேதமோ இல்லாது அனைவரும் பங்குகொள்ள அனுமதி உண்டு.
நல்லாட்சிக்கு உதவிய நபர்கள் மட்டும் அல்லாது நல்லாட்சியை எதிர்த்த அனைவருக்கும் அரச நிகழ்வுகளில் பங்குகொள்ள அனுமதி உண்டு. எனினும் எம்மால் யாரையும் கட்டாயப்படுத்தி எந்த நிகழ்வுகளிலும் பங்குகொள்ள அனுமதிக்க முடியாது.
மஹிந்த தரப்பினர் இந்த நிகழ்வுகளை புறக்கணிப்பது அவரவர் விருப்பமேயாகும். எனினும் தனிப்பட்ட பகைகள் காரணமாக வைத்து எம்மை விமர்சிப்பது எந்த வகையிலும் ஏற்றுகொள்ள முடியாத விடயமாகும் என்றார்.