பரகஹதெனிய பள்ளிவாயல் “அமைதி” பதாதை மேல் நீதிமன்ற வழக்கு முடிவு
கடந்த வருடம் பொதுபல செனாவினால் பெரும் பிரச்சினையை கிளப்பிவிட்ட பள்ளிவாயல் “அமைதி” பதாதை வழக்கு பள்ளிவாயல்களுக்கு சாதகமாக இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பொதுபல சேனா இது சம்பந்தமாக குருநாகலில் இடம்பெற்ற அவர்களது கூட்டத்தின்போது பள்ளிவாயல் “அமைதி” பதாதை பொலிசாரினால் அகற்றப்படவேண்டும் அல்லது அவர்களினால் அது தகர்த்தெறியப்படும் என்று குறிப்பிடப்பட்ட நிலையில் அதனை பொலிசார் அகற்ற முனைந்தபோது பரகஹதெனிய மக்கள் ஒன்றிணைந்து தடுத்ததன் விளைவாக பொலிசார் இதனை அகற்றக்கோரி பிளெஸ்ஸ நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து, 14 நாட்களுக்குள் அகற்றவேண்டும் உத்தரவைப் பெற்று, குறித்த உத்தரவை பள்ளிகளுக்கு அறிவித்தது.
இந்நிலையில் இது ஒருதலைப்பட்ச தீர்ப்பு என்றும் இதனை மேல் நீதிமன்றில் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை குருநாகல் மேல் நீதிமன்றுக்கு விடுவிக்கப்பட்டு அது ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், பிளெஸ்ஸ நீதிவான் நீதிமன்றில் வழக்கை விசாரிக்க தடையுத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையிலேயே பொதுபல சேனாவினால் இப்பதாதைகள் இரவோடு இரவாக (19/01/2014) தீமூட்டப்பட்டு பரகஹதெனியாவில் பதட்ட சூழ்நிலை உருவானமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பரகஹதெனிய பள்ளிவாயல்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன்போது வீதி அபிவிருத்தி அதிகாரசபையுடன் ஆலோசித்து மீண்டும் பதாதைகளை முன்னர் இருந்தவாறு மறுசீரமைத்து பொறுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. mntks