Breaking
Sun. Dec 22nd, 2024

அரசி பல்கீஸின் ஆணையின்படி, சுலைமான் (அலை) அவர்களுக்கு விலை மதிப்புள்ள பல பொருட்களை எடுத்துக் கொண்டு சுலைமான் (அலை) அவர்களின் நாட்டிற்கு வரவிருப்பதை ஹுத்ஹுத் பறவை சுலைமான் (அலை) அவர்களுக்குத் தெரிவித்தது.

உடனே சுலைமான் (அலை), அரசி பல்கீஸின் பிரமுகர்கள் வருவதற்கு முன்பாக, அவர்கள் வந்து இறங்கவிருக்கும் இடத்தைச் சுத்தமாக்கி அலங்கரித்து மிக அழகான இடமாக மாற்ற உத்தரவிட்டார்கள்.

அரசி பல்கீஸின் பிரமுகர்கள் பரிசுப் பொருட்களுடன் சுலைமான் நபியைக் காண வந்தார்கள். அந்த இடத்தைப் பார்த்து அசந்து போய் நின்றார்கள். பிரமித்தார்கள். சுலைமான் (அலை) பிரம்மாண்டமான் அரியாசனத்தில் வீற்றிருக்க, பறவைகள் அவர்களுக்கு மேல் நிழற்குடை போல் சுற்றிக் கொண்டிருந்ததைக் கண்டு வியந்தார்கள். அவர்களுடைய கண்களை அவர்களே நம்ப முடியாத அளவிற்கு இருந்தது அந்தக் காட்சி.

எல்லாச் செல்வங்களும் நிறைந்திருக்கும் அரசருக்கு பரிசு கொடுக்கவே தயங்கியபடி அரசியின் கட்டளை என்பதால் பரிசுப் பொருட்களை அளித்தார்கள்.

அதனை மறுத்து இறைத்தூதர் சுலைமான் (அலை) “மிக்க நன்றி. உங்களுடைய பரிசுகளை நான் ஏற்க மறுக்கிறேன். உங்களுடைய இந்த முயற்சி வீணானது குறித்தும், இப்பொருட்களையெல்லாம் எடுத்து வந்து திரும்ப எடுத்துச் செல்லும் சிரமத்திற்கு உங்களை ஆளாக்கியதற்காகவும் என்னை மன்னியுங்கள். ஆனால் அல்லாஹ் எனக்குத் தேவையானவற்றைவிடவும் மிக அதிகமாகத் தந்து ஆசிர்வதித்துள்ளான்.

உங்களுக்குத் தந்திருப்பதைவிட அதிகமாகவே எங்களுக்குத் தந்துள்ளான். எனக்கு எந்தப் பொருள் மீதும் மோகமில்லை. நீங்கள்தான் இப்படியான பொருட்களைக் கொண்டு மகிழ்ச்சியடைகிறீர்கள். எனக்கு எந்தப் பரிசுகளும் தேவைப்படவில்லை. எனது தேவையெல்லாம் நீங்களும் உங்கள் அரசவையில் உள்ளவர்களும், உங்கள் நகரத்தைச் சேர்ந்தவர்களும் சூரியனையும், நிரந்தரமில்லாதவற்றையும் வணங்குவதைக் கைவிட்டு, இறைவன் ஒருவனே என்ற ஓரிறை நம்பிக்கையை ஏற்றுக் கொள்ளச் சொல்லுங்கள். மறுத்தால், இறைவனின் தண்டனைக்குள்ளாவதை யாரும் தடுக்க இயலாது” என்று கண்ணியமான முறையில் விளக்கினார்கள்.

பல்கீஸ் அரசியின் பிரமுகர்கள் தங்கள் அரசியிடம் தெரிவிப்பதாகச் சொல்லி சுலைமான் (அலை) அவர்கள் மறுத்த பரிசுப் பொருட்களை எடுத்துக் கொண்டு வந்த வழியே திரும்பிச் சென்றார்கள்.
திருக்குர்ஆன் 27:35-37

By

Related Post