Breaking
Sun. Jan 12th, 2025

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு அனைத்தையும் இழந்து, பரிதவிப்புடன் வாழ்ந்த முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்காகவே முதன்முதலில் நாங்கள் அந்தப் பிரதேசத்தில் கால்பதித்தோம் எனவும் அப்போது, அரசியல் சார்ந்த எந்த நோக்கமும் இருக்கவில்லை எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

முல்லைத்தீவில் இன்று காலை (27) இடம்பெற்ற மக்கள் பணிமனை திறப்பு விழாவில் அவர் உரையாற்றினார்.

அவர் அங்கு கூறியதாவது,

“மோசமாக பாதிக்கப்பட்ட இந்த மாவட்டத்துக்கு நாம் வந்தபோது, வாகனங்களும் கட்டிடங்களும் எரிந்துகொண்டும் எரிந்து முடிந்த குறையாகவும் காணப்பட்டது. யுத்தம் இந்த மாவட்டத்தை அணுஅணுவாக சல்லடை போட்டிருந்தது. மக்கள் எல்லாவற்றையும் இழந்திருந்தனர். எனவேதான் அவர்களின் அடிப்படை தேவைகளை முதலில் நிவர்த்தி செய்தோம். பின்னர், அவர்களின் வாழ்க்கை தரத்தைக் கட்டியெழுப்பவும் வாழ்வை மேம்படுத்தவும் செயற்திட்டங்களை முன்னெடுத்தோம். மீள்குடியேற்றும் செயற்பாடுகளை தொடங்கினோம். மீள்குடியேற்றப் பணிகளை கட்டம்கட்டமாக மேற்கொண்டு ஒட்டுசுட்டான், கரைத்துறைப்பற்று என வியாபிக்கச் செய்து பின்னர், இறுதியாக புதுக்குடியிருப்பில் நிறைவு செய்தோம்.

இந்தப் பிரதேசத்தின் அபிவிருத்தியை பூச்சியத்திலிருந்து தொடங்கி, முடிந்தளவு உச்சளவுக்குக் கொண்டு வந்தோம். அரச சார்ப்பற்ற நிறுவனங்கள், யுனிசெப் உள்ளிட்ட ஐ.நா நிறுவனங்கள், நமது அரசு மற்று இந்திய அரச உதவியுடன் இதனைச் செய்ய முடிந்தது.

இந்த மாவட்டத்தில் சமுர்த்தி திட்டத்தை முதன்முதலாக அறிமுகப்படுத்தினோம். சமுர்த்தி அதிகாரிகளை நியமித்தோம். தகர்ந்தும் உருக்குலைந்தும் கிடந்த வைத்தியசாலைகள், பாடசாலைகள் அரச அலுவலகங்கள், திணைக்களங்கள் ஆகியவற்றின் கட்டடங்களை மீள நிறுத்தி, அதனை இயங்கச் செய்ய ஆளணிகளை நியமித்தோம். குளங்கள் மற்றும் பாதைகளை புனரமைத்தோம். பின்தங்கியிருந்த பாடசாலை மாணவர்களின் கல்விக்கான பல திட்டங்களை முன்னெடுத்திருக்கின்றோம்.

மக்களின் பரிதவிப்பு மற்றும் இழப்பினால் ஏற்பட்ட துன்பங்களை சரி செய்யும் நோக்கிலேயும், சுடுகாடாய்க் கிடந்த இந்த மக்களின் வாழ்விலே எழுச்சியை ஏற்படுத்தவுமே இந்தப் பணிகளை மேற்கொண்டோம்.

நாங்கள் இந்தப் பிரதேசத்தில் பின்னர், கட்சி ரீதியான அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்த போது, எமது சேவையில் நம்பிக்கை கொண்டவர்கள் எம்முடன் இணைந்தனர். எமக்கு உற்சாகமூட்டினர். இவர்கள் அனைவரினதும் ஒத்துழைப்பினாலும் ஒற்றுமையினாலும் படிப்படியாக கட்சியை விஸ்தரிக்க முடிந்தது.

கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் சுமார் 12,000 வாக்குகளுக்கு மேல் இந்த மாவட்டத்தில் எமது கட்சி பெற்றது. மாந்தை கிழக்கு பிரதேச சபையை எம்மால் கைப்பற்ற முடிந்ததுடன், பல வட்டாரங்களில் அங்கத்தவர்களும் கிடைத்தனர். அத்துடன், கடந்த மாகாண சபை தேர்தலில் ஒரு உறுப்பினரை பெறவும் முடிந்ததது. இந்த மாவட்டத்தில் கட்சிக்கு காத்திரமான அடைவு எமக்குக் கிடைத்தது. கட்சியின் மீது நீங்கள் வைத்த நம்பிக்கையும் உங்களின் ஒற்றுமையுமே இதற்க்குக் காரணம்.

இந்த ஒற்றுமை நீடித்தால் எதிர்காலத்தில், எமது கட்சி சார்பான பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை, இந்த மாவட்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கக் கூடிய சாத்தியம் நிறையவே இருக்கின்றது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் முசலி, மன்னார், மாந்தை கிழக்கு ஆகிய பிரதேச சபையின் தவிசாளர்கள், மாவட்ட இணைப்பாளர் மபூஸ் அஹமட், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஜனோபர், முன்னாள் மக்கள் தொடர்பு அதிகாரி மொஹிடீன் உட்பட கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள், வேட்பாளர்கள், கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

-ஊடகப்பிரிவு-

Related Post