அனைத்து முஸ்லிம் சக்திகளினதும் ஆதாரமாக துருக்கி இருப்பதாக பாராட்டி இருக்கும் ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் காலித் மிஷால் பலஸ்தீன விவகாரத்தில் ஆதரவளிப்பதற்காக துருக்கி தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
“ஸ்திரமான, ஜனநாயகமான மற்றும் அபிவிருத்தி அடைந்த ஒரு துருக்கி அனைத்து முஸ்லிம் சக்திக்கான ஆதாராமாக உள்ளது” என்று துருக்கியின் ஆளும் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி மாநாட்டில் பங்கேற்று மிஷால் குறிப்பிட்டார்.
“வலுவான துருக்கி என்பது வலுவான ஜரூசலம், வலுவான ஒரு பலஸ்தீனமாகும்” என்று குறிப்பிட்ட அவர் பலஸ்தீன, ஜரூசலத்தின் விடுதலை குறித்தும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். துருக்கியின் கொன்யா நகரில் இடம்பெற்ற இந்த மாநாட்டில் மிஷாலின் உரைக்கு கூடியிருந்த ஆளுங் கட்சியினர் துருக்கி மற்றும் பலஸ்தீன கொடிகளை அசைத்தவாறு “அல்லாஹு அக்பர்” என்றும் “இஸ்ரேல் ஒழிக” என்றும் கோ’மெழுப்பினர்.
துருக்கியின் ஆளும் கட்சி நிகழ்வுகளில் ஹமாஸ் தலைவர் அடிக்கடி பங்கேற்று வருகிறார். இதற்கு முன்னர் ஜனாதிபதி ரிசப் தய்யிப் எர்துகான் பிரதமராக இருந்த போது 2012 ஆளும் கட்சி மாநாட்டிலும் மிஷால் பங்கேற்றிருந்தார்.
கடந்த சனிக்கிழமை நடந்த மாநாட்டில் துருக்கியின் தற்போ தைய பிரதமர் அஹ்மட் டவு டொக்லு உரையாற்றும்போது, நட்சத்திரம் மற்றும் பிறையுடனான துருக்கியின் சிவப்பு தேசிய கொடி உலகின் அப்பாவி மக்களின் குறியீடாகும் என்று குறிப்பிட்டார்.
“அப்பாவிகளின் குறியீடாக சிவப்பு கொடியை மாற்றுவோம் என்பதை இறைவன் சாட்சியம் கூறுவான். இந்த சிவப்புக் கொடி, பலஸ்தீனம், சுதந்திர சிரிய மற்றும் ஏனைய அப்பாவிகளினது கொடியுடன் ஒன்றாக பறக்கும்” என்றும் குறிப்பிட்டார். துருக்கி ஜனாதிபதி எர்துகான் பலஸ்தீன விவகாரத்தில் தீவிர ஆதரவு காட்டி வருகிறார். ஹமாஸ் ஆளு கையில் உள்ள காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் களுக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டு வந்தவராவார்.