Breaking
Mon. Dec 23rd, 2024

நாடளாவிய ரீதியிலுள்ள பல்கலைக்கழகங்களின் 80,000 ற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு மடி கணனிகளை வழங்கும் அரசாங்கத்தின் செயற்திட்டம் (26) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற இந்த உத்தியோகபூர்வ நிகழ்வில் மாணவர்களுக்கு மடிகணனிகள் பிரதமரால் கையளிக்கப்பட்டன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வரவு செலவு திட்ட வாக்குறுதிக்கமைய இச் செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதுடன் மடிகணனியைப் பல்கலைக்கழக மாணவர்கள் பெற்றுக் கொள்வதற்காக 75,000 ரூபா நிதி இலகு கடனாக வழங்கப்படுகிறது.

நாடளாவிய ரீதியிலுள்ள பல்கலைக்கழகங்களின் 80,000 ற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இந்த மடிகணனிக்கான கடன் வழங்கப்படுவதுடன் மாணவர்கள் இந்த 75,000 ரூபா கடனை மூன்று வருடத்திற்குள் மீள செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வங்கிக் கடன் மூலம் மாணவர்களுக்கு இத்தொகை வழங்கப்படுகிறது. இதன்மூலம் அவர்கள் தமக்கு விருப்பமான மடிகணனியைத் தெரிவு செய்துகொள்ள வழி வகுக்கப்பட்டுள்ளது.

நேற்றைய மேற்படி உத்தியோகபூர்வ நிகழ்வில் உரையாற்றிய உயர் கல்வி அமைச்சின் செயலாளர் டி. சி. திசாநாயாக்க, தற்போதைய அரசாங்கம் உயர் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார். கடந்த காலங்களில் 40 பில்லியனாக இருந்த இத்தொகையை அரசாங்கம் 60 பில்லியனாக அதிகரித்துள்ளது. எதிர்வரும் வருடங்களில் இது மேலும் பல பில்லியன்களால் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

நேற்றைய இந்த உத்தியோகபூர்வ நிகழ்வில் உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, இராஜாங்க அமைச்சர் மொஹான் லால் கிரேரூ, பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் பல்கலைக்கழகங்களின் வேந்தர்கள் உபவேந்தர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post