Breaking
Mon. Jan 13th, 2025

சமூகத்தின் பல்துறை சார்ந்தவர்களை வேறுவேறாக வகைப்படுத்தி, மூளைச்சலவை செய்யும் தந்திரோபாய வேலைத்திட்டமொன்றை பேரினவாத தரகர்கள் மேற்கொண்டு வருவதாகவும், சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்தை வெகுவாக குறைத்தெடுப்பதே இவர்களின் உள்ளார்ந்த திட்டமெனவும் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

 

“புத்தளம் மாவட்டத்தின் தம்பபண்ணி, கொய்யாவாடி மற்றும் ஆலங்குடா பிரதேசங்களில் இடம்பெயர்ந்து வாழும் வடக்கு மக்களுடன்நேற்று (23) இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

 

“புத்திஜீவிகள்,  உலமாக்கள், கற்றவர்கள், தனவந்தர்கள் மற்றும் வர்த்தகர்கள் என்று வகைப்படுத்தி, அவர்களுடன் தனித்தனியாக கூட்டங்களை நடத்தி, மிகவும் கச்சிதமாக இந்த நாடகத்தை அவர்கள் அரங்கேற்றுகின்றனர்.

 

நாம் முக்கியமானதொரு தருணத்தில் இருந்துகொண்டிருக்கின்றோம். தேர்தல் நெருங்கநெருங்க நமக்குப் பரிச்சயமில்லாத, நமக்கு உதவி செய்யாத, என்றுமே எமது இன்பதுன்பங்களில் பங்கேற்காத புதியவர்கள், இப்போது நமது பிரதேசங்களில் தலைகாட்டத் தொடங்கியுள்ளனர். எவர் என்னதான் சொன்னாலும் நமது எதிர்காலத்தை நாமே தீர்மானிக்க வேண்டிய தேர்தலாக இது அமையப்போகின்றது.

 

கடந்த காலங்களில் வன்னிச் சமூகம், புத்திசாதுரியமாகவும் ஒற்றுமையாகவும் செயற்பட்டு நமக்கு வாக்களித்ததனாலேயே, சமூகத்தின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட்டது. அதுமட்டுமின்றி, ஒன்றுக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களைக்கூட பெற்றுக்கொள்ள முடிந்தது. நீங்கள் வழங்கிய வாக்குகள் மூலமே பலமான அரசியல் கட்டமைப்பை உருவாக்க முடிந்ததுடன், தேர்தல் காலங்களில் நாம் வழங்கிய வாக்குறுதிகளையும் நிறைவேற்ற இறைவன் வசதி செய்து தந்தான். அத்துடன் நாடு முழுவதும் பணியாற்றும் அந்தஸ்தையும் சந்தர்ப்பத்தையும் இறைவன் பெற்றுத்தந்தான்.

 

வன்னி மக்களின் ஐக்கியம், தளராத முயற்சி போன்று, புத்தளம் மக்களும் செயற்பட்டால் இழந்துபோன பிரதிநிதித்துவத்தை இலகுவில் மீட்டெடுக்க முடியும். நாம் வன்னி மண்ணிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட போதும், வாழ்ந்த மண்ணுக்கு மாத்திரமின்றி, எம்மை வாழவைத்த மண்ணுக்கும் பணி செய்திருக்கின்றோம். அதுமட்டுமின்றி, நாடளாவிய ரீதியில் நேர்மையாக பணிசெய்துள்ளோம்.

 

எமது சொந்த மண்ணில், மக்களை மீளக்குடியேற்றம் செய்தமையும், அவர்களின் இன்பதுன்பங்களில் ஒத்தாசையாக இருந்தமையுமே, இனவாதிகள் எம்மீது வீண்பழி சுமத்துவதற்கு காரணமாயிற்று. பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் 225 எம்பிக்களில், நெருக்கடியையும் கஷ்டத்தையும் அதிகம் சந்திக்கும் ஒருவனாக நான் இருக்கின்றேன்.. பேரினவாதிகளும் மதவாதிகளும் இவ்வாறு என்னை நெருக்கடிக்குள்ளாக்குவதற்கு என்ன காரணம்? என்பதை, நீங்கள் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளீர்கள்” என்றார்.  

 

Related Post