Breaking
Sat. Nov 16th, 2024

இம்முறை நடைபெறவுள்ள தேர்தலில் எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு அம்பாறை மாவட்ட மக்கள் வாக்களித்து இரண்டு ஆசனங்களைப் பெற்றுக் கொடுத்தால் இம்மாவட்ட முஸ்லிம்களின் நீண்டகாலத் தேவையாகப் பார்க்கப்படுகின்ற கரையோர மாவட்டம் நிச்சயம் பெற்றுத் தரப்படும். பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியேற்று கரையோர மாவட்டம் பிரகடனப்படுத்தப்பட்ட பின்பே நானும் எனது கட்சியினரும் அமைச்சுப் பொறுப்பினை ஏற்றுக் கொள்வோம் இல்லையேல் நாம் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்து கொள்வோம் என வன்னி மாவட்ட வேட்பாளரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிடும் தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயிலினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பு சம்மாந்துறையில் இடம்பெற்றது. இதன்போது கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் நீண்ட காலத் தேவையாக கரையோர மாவட்டக் கோரிக்கை இருந்து வருகின்றது. தேர்தல் காலத்தில் மாத்திரம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமையினால் இவ்விடயம் பெரிது படுத்தப்படும். ஆனால் தேர்தல் முடிந்த பின்னர் இதுபற்றி யாருமே பேசாமல் மௌனிகளாகி விடுவர். அம்பாறை மாவட்டத்தின் நிருவாகம் பெரும்பாலும் பெரும்பான்மைச் சமூகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவதே இப்பிராந்திய மக்கள் கரையோர மாவட்டத்தை பெற்றுத் தருமாறு கோருகின்றனர்.

கடந்த முப்பது வருடங்களுக்கு முன்னர் நமது முஸ்லிம் மக்களுக்கானவற்றை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் பெருந்தலைவர் மர்ஹும் அஷ்ரஃப் அவர்களினால் உருவாக்கம் பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை கடந்த பதினைந்து வருடங்களான கையிலெடுத்துக் கொண்ட அதன் தலைவர் சந்தர்ப்பவாத அரசியல் செய்து கொண்டு மக்களை ஏமாற்றி வருகின்றார். தேர்தல் காலத்தில் மாத்திரம் மக்களை உணர்ச்சிவசப்படுத்தும் வகையில் சில கோசங்களைப் போடுவார் பின்னர் அவ்விடயங்கள் பற்றி எதுவுமே பேசமாட்டார். ரவூப் ஹக்கீமினால் எந்தவொரு இலாபமோ பயனோ இல்லை.

அம்பாறை மாவட்டத்திற்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் பல கோடி ரூபா பணத்தினை ஒதுக்கீடு செய்து அபிவிருத்தி செய்ய நான் முற்பட்டபோதெல்லாம் இங்குள்ள முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட சிலர் இம்மாவட்டம் எமது கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இங்குள்ள மக்கள் எம்மை மாத்திரமே ஆதரிக்கின்றார்கள் என்று நமது சமூகத்திற்காக நான் கொண்டு வந்த அபிவிருத்திகளை ஓரங்கட்டினர். மருதமுனைப் பிரதேசத்தில் நெசவு கைத்தொழிலாளர்கள் செறிந்து வாழ்ந்து வருகின்றனர் அவர்களது தொழிலை விருத்தி செய்யும் வகையில் நூல்களுக்கு நிறமூட்டும் நிலையத்தினை நிறுவுவதற்காக எட்டுக் கோடி ரூபா பணத்தினை வழங்கியிருந்தேன்.

ஆனால் அதனை இங்குள்ளவர்களின் அரசியல் தலையீட்னால் நிறுவ முடியவில்லை. அதனை பேரினவாத அரசியல்வாதியொருவர் அம்பாறைக்கு தருமாறு கேட்டுக் கொண்டிருந்ததால் நமது சமூகம் பயன்பெறட்டும் என்ற நோக்கில் அந்நிலையத்தினை காத்தான்குடி பிரதேசத்திற்கு வழங்க வேண்டி ஏற்பட்டது.

நமது மக்களுக்கு நல்லது செய்ய எத்தனிக்கின்றபோத சுயநல அரசியலுக்காக எமது அபிவிருத்திகளை ஒதுக்கி விடுவது நல்ல விடயமல்ல. அதனால்தான் இம்முறை அம்பாறை மாவட்ட மக்கள் ஒற்றுமைப்பட்டு எமது கட்சிக்கு வாக்களித்து இரண்டு ஆசனங்களைப் பெற்றுக் கொடுத்தால் இம்மாவட்ட மக்களின் கரையோர மாவட்டத்திற்கான கனவு நிச்சயம் நிறைவேற்றித் தரப்படவுள்ளதோடு இம்மாவட்டத்தின் தேவைகள் அனைத்தையும் நிவர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளோம்.

இம்முறை நடைபெறவுள்ள தேர்தல் மூலம் எமது கட்சி அதிகப்படியான ஆசனங்களைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தின் அடிப்படையிலேயே நாம் சில பிரதேசங்களில் தனித்தும் சில பிரதேசங்களில் இணைந்தும் போட்டியிடுகின்றோம். யாரையும் தோல்வியடையச் செய்ய வேண்டும் என்றோ அல்லது யாரையும் அரசியலிலிருந்து ஓரங்கட்ட வேண்டும் என்ற நோக்கத்திலோ நாம் தேர்தலில் இறங்கவில்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் நினைப்பது போன்று வன்னியில் என்னை வீழ்த்துவதற்கும் மட்டக்களப்பில் பிரதி அமைச்சர் அமீர் அலியை வீழ்த்தும் வகையில் நாம் கீழ்த்தர அரசியல் செய்யவில்லை.

இம்முறை நாம் எமது கட்சியினை சில மாவட்டங்களுக்கு விஸ்தரித்திருக்கின்றோம் அந்த வகையில் நாம் எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களை வென்றெடுப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. அத்தோடு எமக்காக இரண்டு போனஸ் ஆசனங்கள் வழங்குதற்காக வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறாக கிடைக்கும் பத்து ஆசனங்களைக் கொண்டு நமது மக்களுக்கு பாரிய சேவை செய்ய திட்டமிட்டுள்ளோம்.

இந்நாட்டிலுள்ள ஏனைய மதத்தவர்கள் மத ரீதியிலான அடிப்படையினைக் கொண்டு சமூக நல அமைப்புகளை ஏற்படுத்தி சிறந்த கட்டமைப்புடன் இவ்வினம் சார்ந்த மக்களுக்கு பாரிய நன்மைகளைச் செய்து வருகின்றார்கள். ஆனால் இலங்கையில் உள்ள முஸ்லிம்களுக்கென்று ஒரு திட்டமிடப்பட்ட அமைப்போ கட்டமைப்போ இல்லை. நமது முஸ்லிம்களுக்காக உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்காரர்களுக்கு இவ்விடயம் பற்றி எந்த அக்கறையும் இல்லை. ஆனால் எமது கட்சி இந்நாட்டிலுள்ள அனைத்துத் தரப்பு முஸ்லிம் முக்கியஸ்தர்களை ஒன்று சேர்த்து சமூக பொருளாதார கல்வி விருத்தி உள்ளிட்ட ஐந்து துறைகளை தரப்படுத்தி அரசியல் செய்வதுடன் சமூகப் பணிகளையும் மேற்கொள்ளவுள்ளோம்.

இந்த நாட்டில் நீண்ட காலமாக நிலைகொண்டிருந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. அவர் செய்த அந்த நன்மையான காரியங்களுக்காக அவர் பக்கம் நின்றோம். அவர் நமது சமூகத்திற்கு துரோகம் செய்ய முற்பட்டபோது அவரை உதறித்தள்ளி எறிந்து விட்டு வெளியேறி வந்தோம்.

அண்மையில் எமது முஸ்லிம் அகதிகளுக்கு பாரிய அபிவிருத்திகளைச் செய்து தந்த பஷில் ராஜபக்ஷ சுகவீனமுற்று வைத்தியசாலையில் இருந்தபோது நானும் சில முஸ்லிம் முக்கயஸ்தர்களும் சென்று சுகம் விசாரித்தோம். எமது சமூகத்திற்கு நன்மைகள் செய்து தந்த நன்றிக்கடனுக்காக அவரை வைத்திசாலைக்கு பார்க்கச் சென்றேனே தவிர சிலர் சொல்வது போல் எனக்கு அவரை சந்திப்பதற்கு வேறெந்த தனிப்பட்ட நோக்கமுமல்ல. எமது இஸ்லாம் மார்க்கம் பண்பான மார்க்கமாகும். அந்த மார்க்கம் போதித்ததற்கமைவாக நோயாளியைப் பார்ப்பதும் உதவிக்கு நன்றி செலுத்துவதும் குற்றமான செயலன்று. அவர் செய்த நன்மைகளை நாம் வரவேற்றதுடன் துரோகத்தனத்திற்கு எதிர்ப்பினையும் நாம் தெரிவித்திருக்கின்றோம்.

இருபதாவது திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவது எமது சிறுபான்மைச் சமூகத்திற்கு பாரிய இழப்பாக அமைந்து விடும். இந்த இருபதாவது திருத்தச் சட்டத்தினை கொண்டுவருவதற்கு பெரும்பான்மைக் கட்சிகள் பெரிதும் விருப்பம் கொண்டுள்ளன. குறிப்பாக பெரும்பான்மைக் கட்சிகளில் இருக்கின்ற பேரினவாத கொள்கை கொண்டவர்கள் ஆட்சி அமைப்பதற்காக சிறுபான்மைக் கட்சிகளின் தேவை இல்லாமல் செய்வதற்காக முயற்சிக்கின்றனர்.

தற்போது நாட்டிலுள்ள தேர்தல் முறைதான் சிறுபான்மைச் சமூகத்திற்கு உகந்த தேர்தல் முறையாககும். இத்தேர்தல் முறை மாறாமல் இருப்பதற்கு சிறுபான்மைச் சமூகத்தினர் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். நாம் இலங்கையில் சுமார் பத்து சதவீதம் உள்ளோம். அதற்கமைவாக பாராளுமன்றத்தில் சுமார் 23 பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

இதற்காக எதிர்காலத்தில் நமது மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை செய்ய வேண்டும். இம்முறை தேர்தலில் களமிறங்கியுள்ள நமது முஸ்லிம்கள் எந்தக் கட்சியில் இருந்த போதிலும் முதலில் நாட்டு முஸ்லிம் வாக்காளர்கள் முதற் தெரிவாக முஸ்லிம் பிரதிநிதியொருவருக்கு வாக்களித்து கூடுதலான பாராளுமன்ற பிரதிநிதிகளை பெற்றடுக்க ஒற்றுமைப்பட்டு செயற்பட வேண்டும் என்றார்.

Related Post