ஈராக்கில் ஷியா-சன்னி பிரிவு மக்களுக்கிடையே ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இனப்பகை நீடித்து வருகிறது.
சன்னி பிரிவினர் சிறுபான்மையாக வாழும் பகுதிகளில் ஷியா பிரிவினரும், ஷியா இனத்தவர் சிறுபான்மையாக வாழும் பகுதிகளில் சன்னி இனத்தவரும் மேலாதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
இவ்வகையில், ஒடுக்கப்படும் பிரிவினர் தகுந்த நேரம் பார்த்து ஆதிக்கவாதிகள் மீது திடீர் தாக்குதல் நடத்தி நிலைகுலையச் செய்கின்றனர். இத்தகைய வன்முறை தாக்குதல்களில் இருதரப்பிலும் இது வரை லட்சக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர்.
இதற்கிடையே, ஐ.எஸ்.போராளிகளும் ஈராக்கில் சமீபகாலமாக ஏராளமான வன்முறை தாக்குதல்களை நிகழ்த்தி பல உயிர்களை கொத்தும், குலையுமாக பறித்து வருகின்றனர்.
ஆயுத பலம் மூலம் மொசூல் நகரை கைப்பற்றி, அதனை தலைமைபீடமாக அமைத்துக் கொண்டு, ஈராக்கின் இதர பகுதிகளையும் ஐ.எஸ்.படையினர் மெல்ல, மெல்ல கைப்பற்றி வருகின்றனர். கடந்த 11-ம் தேதி ஐ.எஸ்.போராளிகளின் வசமாகிய டியாலா மாகாணத்தின் ஜலவ்லா பகுதியை அமெரிக்க விமானப் படையின் உதவியுடன் குர்திஷ் போராளிகள் இன்று கைப்பற்றினர்.
இந்நிலையில், டியாலா மாகானத்தின் ஹம்ரீன் பகுதியில் உள்ள சன்னி பிரிவினரின் மசூதி ஒன்றுக்குள் இன்று புகுந்த ஷியாகள், உள்ளே இருந்த மக்களை இயந்திர துப்பாக்கிகளால் துளைத்தெடுத்தனர்.
இந்த திடீர் தாக்குதலில் 70 பேர் பலியாகினர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஈராக்கில் சுமார் 60 சதவீதம் ஷியா பிரிவினரும், 30 சதவீதம் சன்னி பிரிவினரும், 10 சதவீதம் குர்த் இன மக்களும் வாழ்ந்து வருகின்றனர். அங்கு நடைபெறும் ஆட்சிக்கு தலைமை வகிப்பவர்களும் பெரும்பான்மை இனமான ஷியா பிரிவனர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.