(சர்ஜூன் ஜமால்தீன்)
வட மாகாண சபைத் தேர்தலில் வட முஸ்லிம்கள் தொடர்பான ஒரு கருத்து நோக்கு
வடக்கிற்கான மாகாண சபைத் தேர்தலை பல சர்வதேச உறுப்புக்கள் ஒன்றிணைந்து எதிர்வரும் 21ஆம் திகதி நடத்துகின்றன. இந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தாம் வெற்றிவோம் என்ற நம்பிக்கையிலும் வேறுபட்ட பிராந்திய நலன்களை அடிப்படையாகக் கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்புத் தான் வெற்றி பெற வேண்டும் என்ற கருத்து நிலையில் அரசாங்கமும் உள்ளது.
இத்தேர்தலில் அரசாங்கமும் அதனை பிரதிநித்துவம் செய்யும் முஸ்லிம் கட்சிகளும் எவ்வாறான நகர்வுகளை முன்னெடுக்கின்றது என்பதும் இம் முஸ்லிம் கட்சிகள் வடக்கு முஸ்லிம்களின் வாக்குகளை எவ்வாறு சேகரிக்கவுள்ளது என்பதும் இங்கு ஒரு பொதுக் கேள்வியாகவுள்ளது.
ஏனெனில் சமகால அரசியலில் முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த பேரீனவாதிகள் பல சதிமுயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் அதனை தடுப்பதற்கான ஆக்கபூர்வமான நகர்வுகளை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்ற தொய்வு மனப்பாங்கு தற்போது வடக்கு உட்ப எல்லா பாகங்களில் வாழும் முஸ்லிம்களிடத்தில் படர்ந்துள்ளது.
இதன் காராணமாக அரசாங்கம் எனும் சொற்பதத்திற்கு சிங்கள மக்களை பிரதிநித்துவம் செய்யும் அமைப்பு என்ற வடிவம் இலங்கை முஸ்லிம்களால் கொடுக்கப்படுகின்றது. இவ் ஆளப்பதிந்துள்ள இக்கருத்து வடிவத்தைக் கொண்டு வாக்களிக்கவுள்ள வட புலத்து முஸ்லிம்களின் தெரிவு எதுவாகவும் இருக்கலாம்.
அதேபோன்று அவர்களின் வாக்குரிமை யாருக்கும் இடலாம். ஆனால் இங்குள்ள பொது நிபந்தனை என்னவெனில் அனைத்து வட முஸ்லிம்களும் பொதுக் கொள்கையின் பக்கம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தார்மீகப் பொறுப்பு ஒவ்வொருவர் மீதும் சுமத்தப்பட்டுள்ளது.
ஏனெனில் புலிகளால் வெளியேற்றப்பட்டு 20வருட அகதி வாழ்க்கைக்கு பின் மீள் குடியேறிக் கொண்டிருக்கும் வட முஸ்லிம்களுக்கு பல உரிமைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டிய அதிக தேவைப்பாடுகள் காணப்படுகின்றன.
இந்நிலையில் வடமுஸ்லிம்களை பிரதிநித்துவம் செய்யும் வடக்கைத் தளமாகக் கொண்டுள்ள அமைச்சர் றிஷhட் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸூம் அமைச்சர் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸூம் வடக்குத் தேர்தல் களத்தில் பிரச்சாரத்தை முடக்கிவிட்டுள்ளன.
இக்கட்சிகளினால் மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்களை சுருங்கக் கூறின் முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களின் மத உரிமை பற்றி (பள்ளி உடைப்பு), முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சியை ஸ்தீரனப்படுத்தல், அரச எதிர்ப்பு நிலை மற்றும் சுயாட்சி, சுயநிர்ணயம் தொடர்பாகவும் அகில மக்கள் காங்கிரஸ் அகதியாக்கப்பட்ட வடமுஸ்லிம்களின் அடிப்படை உரிமை (காணியைப் பெற்றுக்கொடுத்தல், வீடுகளை அமைத்துக் கொடுத்தல், அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றல் மற்றும் தொழில் முயற்சி) மற்றும் மத உரிமை தொடர்பாக அதாவது பௌத்த பேரீனவாதத்திற்கு எதிராக குரல் கொடுத்தல். போன்ற ரீதியில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதனால் வடக்கு தேர்தல் களத்தில் இரு முஸ்லிம் தலைவர்களின் நகர்வுகள் மிகவும் அவதானத்திற்கு உரியது. ஏனெனில் இவர்களின் வழிநடத்தலில் உந்தப்படும் முஸ்லிம் வாக்காளர்களின் செயற்பாடு தான் வடக்கில் முஸ்லிம் பிரதிநித்துவங்களை ஸ்தீரப்படுத்தவுள்ளது. அமைச்சர் றிசாட்டும் ஹக்கீமும் வட முஸ்லிம்களின் எதிர்காலம் பற்றி பேசினாலும் வட முஸ்லிம்கள் இவர்களின் கருத்துக்களை கடந்து யதார்த்த அரசியல் நிலவரத்தில் தெளிவு நிலையை அடைய வேண்டும்.
20வருடங்களின் பின் மீளக்குடியேறிய வட முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளின் தீர்வுக்கு தேசிய அங்கிகாரம் தேவை என்பதிலும் அத்தேசியம் சிங்களத் தேசம் என்பதிலும் எவ்வித சந்தேகம் இல்லை.
வட முஸ்லிம்கள் வரலாற்று தோல்விகளிலிருந்தும் தமது பலவீனங்களிலிருந்தும் அடிமட்ட சிந்தனையிலிருந்தும் விடுபட்டு முஸ்லிம் அரசியற் கட்சிகளை சுயவிமர்சனத்திற்கு உட்படுத்த வேண்டிய தேவை வட முஸ்லிம்களுக்கு இன்று ஏற்பட்டுள்ளது.
இக்கட்டுரையில் இணக்க அரசியல் மற்றும் சமகால யதார்த்த அரசியல் என்ற பதம் பிரயோகிக்கப்படுகின்றது. மஹிந்த ராஜபக்சவையும் அவரது கட்சியையும் ஆதரிப்பது என்ற எண்ணக்கரு அல்ல. ஏனெனில் இலங்கை அரசியலில் சிறுபான்மையினரைப் பொறுத்தவரையில் மஹிந்த மாமாவும் அல்லை ரணில் சித்தப்பாவும் அல்ல. கால ஓட்டத்திற்கு ஏற்றாற் போல் ஆதரவுத் தளங்கள் மாற்றமடைந்துள்ளதை நாம் வரலாற்றில் அவதானிக்கலாம்.
இச் சமகால அரசியலில் வட முஸ்லிம்களின் ஆதரவுத்தளம் எதுவாக இருக்க வேண்டும் என்பதில் வேறுபட்ட சிந்தனைத் தளம் முஸ்லிம் காங்கிரஸினால் தேர்தல் மேடைகளில் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது. இக்குழப்பத்திற்கான தீர்வு வட முஸ்லிம்களின் அக்கரையிலும் நலனிலும் தாக்கம் செலுத்துபவர்களின் பக்கம்தான் அமைய வேண்டும் என்ற உண்மை உண்டு. ஏனெனில் வடமுஸ்லிம்கள் இரவல் சீலையை நம்பி இடுப்புச் சீலையை அவிழ்த்து விடமுடியாது.
அதேபோன்று வடக்கு அரசியலுக்கும் கிழக்கு அரசியலுக்கும் அதிக வேறுபாடுகள் காணப்படுகின்றன. இதனை அறியாமல் கிழக்கு மாகாணத்தில் பெற்ற அரசியல் அனுபவத்தை சரிபார்க்க வடக்கை பரிசோதனைக் களமாக முஸ்லிம் காங்கிரஸ் பயன்படுத்த முடியாது.
இரு முஸ்லிம் தலைவர்களின் வேறுபட்ட அரசியற் சிந்தனைகளால் கடந்த உள்ள10ராட்சி சபைத் தேர்தலில் வட புலத்து முஸ்லிம்கள் மூன்று பிரதேச சபைகளை இழக்க வேண்டி ஏற்பட்டது. இதனை இழப்பு என்பதை விட தங்கள் விரல்களால் தங்கள் கண்களையே குத்திக் கொண்டார்கள்.
மாந்தை பிதேச சபையில்
த.தே.கூட்டமைப்பு பெற்ற வாக்குகள் –3800
அ.இ.ம.காங்கிரஸ் பெற்ற வாக்குகள் – 3500
மு.காங்கிரஸ் -1500 வாக்குகளை பெற்றனர். இங்கு த.தே.கூட்டமைப்பை விட 300 வாக்குகள் குறைவாகப் பெற்றதால் முஸ்லிம்களுக்கு கிடைக்க வேண்டிய இப் பிரதேச சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் பறி கொடுக்கப்பட்டது
அதுபோலதான் (பூநகரி பிரதேச சபை)நாச்சிக்குடா பிரதேசத்தில்
த.தே.கூட்டமைப்பு பெற்ற வாக்குகள் -3996
அ.இ.ம.காங்கிரஸ் பெற்ற வாக்குகள் – 3870
மு.காங்கிரஸ் -153 வாக்குகளை பெற்றனர். இங்கு த.தே.கூட்டமைப்பை விட 126 வாக்குகள் குறைவாகப் பெற்றதால் முஸ்லிம்களுக்கு கிடைக்க வேண்டிய இப் பிரதேச சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் பறிகொடுக்கப்பட்டது. இவ்வாறு தான் மன்னார் பிரதேச சபையை 400 வாக்குகளால் பறிகொடுக்கப்பட்டது. இப்பிரதேச சபைகளை முஸ்லிம் காங்கிரஸூம் கைப்பற்றவில்லை. அகில இலங்கை மக்கள் காங்கிரஸூம் கைப்பற்றவில்லை. மீளக் குடியேறியுள்ள வட முஸ்லிம்களே கையறு நிலைக்கு உள்ளாக்கப்பட்டனர்.
அதேபோன்று கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலை ஒத்த நிலைமையை மீண்டும் வட புலத்து முஸ்லிம்கள் தற்போது எதிர்கொள்கின்றனர். இந்த எதிர்நோக்கல் பிறழ்வு நிலையை ஏற்படுத்தாது ஒன்றிணைந்து செயற்பட்டு அதிகமான முஸ்லிம் உறுப்பினர்களை வடமாகாண சபைக்கு உள்வாங்குமாக இருந்தால் சொந்த மண்ணிலிருந்து துரத்தப்பட்டு அகதியாக்கப்பட்ட முஸ்லிம்களின் மீள் இருப்பில் ஸ்தீரத்தன்மை ஏற்படும்.
வெற்றிக்கான சாதகம் அதிகம் உள்ள தமிழ்த் தேசியத்திற்கு சமாந்தரமான அதிகாரத்தை தக்கவைக்க முடியும்.
இவை நடைபெறாது முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சியை பாதுகாக்க வேண்டும் என்ற முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரச்சாரம் முஸ்லிம்களிடத்தில் ஆதிக்கம் செலுத்துமாக இருந்தால் வைக்கோல் இழுத்த அளுப்பாடு போல் முஸ்லிம் வாக்குகளில்; மீண்டும் இங்கும் அங்குமாக உருவாகும் சிதறல்கள் பல எதிர்வினைகளை ஏற்படுத்தும். அதில் இரண்டை இங்கு குறிப்பிடுவது பொருத்தமானதாகும்.
இற்றைக்கு 20 வருடங்களுக்கு முன்னர் கல்முனை பிரதேசத்திற்கு வர இருக்கும் தனியான கச்சேரியை ஏன் எதிர்க்கின்றீர்கள் என அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதிநிதியிடம் கேட்ட போது அவர் அல்லது அவர்கள் அளித்த பதில் ‘ நாம் கல்முனைக்கென்று தனியான கச்சேரியை பிரித்தெடுத்தால் எமது மாடுகளை மேய்ப்பதற்கு இடப்பிரச்சினையாகிவிடும் அதேபோல் மாடுகளும் அழிந்து விடும் ‘ ஏனெனில் அம்பாறையில் தான் எமது மாடுகள் மேய்கின்றது என்றார்கள். அக்கச்சேரி இன்றுவரை கனவாகத்தான் உள்ளது.
மாடுகளை காப்பாற்ற வேண்டும் என்று அவர்கள் சொன்னது போல் முஸ்லிம் காங்கிரஸ் வடமாகாண சபைத் தேர்தலில் கட்சியைக் காப்பாற்றுவதற்காக தனித்து தேர்தலில் களமிறங்கிச் செயற்படுகின்றோம் என்பது வட முஸ்லிம்களின் ஆக்கபூர்வமான மீள் குடியேற்றத்தை மற்றும் இருப்பை கேள்விக்குறியாக்கிவிடும்.
(02).1978 ஆம் ஆண்டு சர்வஜென வாக்கெடுப்பின் முடிவுகளின் வெற்றியைப் பார்த்து இந்த நாட்டில் இவ்வளவு பெருந்தகையான முட்டாள்கள் உள்ளனரே என ஆச்சரியப்படுகின்றேன் என ஜே.ஆர்.ஜெயவர்த்தனா
அதிர்ந்து போனார்.
அதுபோல் முஸ்லிம்களின் மாகாண சபைக்கான பிரதிநித்துவம் எண்ணிக்கையிலிருந்து பூச்சியத்திற்கு நகருமாக இருந்தால் வட முஸ்லிம்களின் முட்டாள் தனத்தைப் பார்த்து
தமிழ்த் தேசிய வாதிகளின் முஸ்லிம்கள் தொடர்பான செயற்பாடுகளில் சமாந்தரமற்ற அதிகாரப் பிரயோகிப்பு ஆரம்பிக்கப்படும் அது பழைய ஈழத்தில் புதிய முஸ்லிம் அகதிகளை ஏற்படுத்தும்.