Breaking
Sun. Nov 24th, 2024

ஈரானின், அணு ஆயுத தயாரிப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அணு ஆயுதங்களை தயாரிக்க விரும்பும் சவுதி அரேபியாவுக்கு, தேவையான தொழில்நுட்பத்தை பாகிஸ்தான் வழங்க உள்ளது.

இதுதொடர்பாக, பிரிட்டனில் இருந்து வெளியாகும், ‘சண்டே டைம்ஸ்’ பத்திரிகையில்,

அமெரிக்க பாதுகாப்பு நிபுணர் ஒருவர் கூறியுள்ளதாவது: அரசியல் ரீதியான விஷயங்களில், பாகிஸ்தானுக்கும், சவுதி அரேபியாவுக்கும் இடையே நீண்ட கால ஒப்பந்தம் உள்ளது. இதுகுறித்து, அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும், அணு ஆயுத தயாரிப்பில், சவுதிக்கு தேவையான உதவிகளை செய்ய, பாக்., முடிவு செய்துள்ளது. அதேநேரத்தில், அணு ஆயுத தயாரிப்புக்கு தேவையான தொழில்நுட்பத்தை, சவுதி அரேபியாவுக்கு பாகிஸ்தான் வழங்குகிறதா இல்லையா என்பதை, பல நாடுகளின் உளவு துறையினரும் கண்காணித்து வருகின்றனர். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

சவூதிக்கு அணு ஆயுதங்கள் விற்பனையா?: பாகிஸ்தான் மறுப்பு!

பாகிஸ்தானிடமிருந்து அணு ஆயுதங்கள் வாங்க சவூதி அரேபியா முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், பாகிஸ்தான் அதனைத் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் காஸி கலீலுல்லா இஸ்லாமாபாதில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை தெரிவித்ததாவது:
நியாயமான தற்காப்புக்காக பாகிஸ்தானின் அணு ஆயுதத் தயாரிப்புத் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. பிற நாடுகள் பாகிஸ்தான் மீது அணு ஆயுதத்தைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் விதமாக குறைந்தபட்ச அளவில் ஆயுதம் வைத்திருத்தல் என்ற அடிப்படையில் பாகிஸ்தான் செயல்படுகிறது.
நாட்டின் பாதுகாப்புக்காக உருவாக்கிய அணு ஆயுதங்கள் முறையான அதிகாரம், கட்டுப்பாட்டு அமைப்பின் கீழ் உள்ளது.
அணு ஆயுதம் வைத்துள்ள நாடு என்பதைக் குறித்த பொறுப்புகளை பாகிஸ்தான் உணர்ந்திருக்கிறது.
பாகிஸ்தானின் அணு ஆயுதத் திட்டம் குறித்து, அறவே அடிப்படையற்ற, விஷமமான பிரசாரத்தை சர்வதேச ஊடகங்கள் கட்டவிழ்த்துவிட்டுள்ளன. ஆதாரமற்ற தற்போதைய செய்தி அந்தப் பிரசாரத்தின் ஒரு பகுதி.
அணு ஆயுதப் பரவல், அணு சக்திப் பாதுகாப்பு ஆகியவை குறித்த உயரிய நோக்கங்களை பாகிஸ்தான் ஆதரிக்கிறது என்றார் அவர்.
சவூதி அரேபியாவுக்கு அணு ஆயுதங்களை விற்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளதாக, “சண்டே டைம்ஸ்’ நாளேடு அண்மையில் செய்தி வெளியிட்டது.

Related Post