Breaking
Thu. Nov 14th, 2024
இலங்கைக்கு தமது நாட்டின் 8 ஜேஎப்-17 போர் விமானங்களை விற்பனை செய்வதற்கான உடன்படிக்கையை பாகிஸ்தான் செய்துக்கொண்டுள்ளது.

பாகிஸ்தானிய பிரதமர் நவாஸ் செரீப்பின் தற்போதைய இலங்கை விஜயத்தின் போது இது சாத்தியமாகியுள்ளது.

ஏற்கனவே இந்தியாவின் அழுத்தம் காரணமாக இந்த ஜேஎப் 17 போர் விமானங்களை இலங்கை கொள்வனவு செய்யாது என்று தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும் நவாஸ் செரீப்பும் மைத்திரிபால சிறிசேனவும் நேற்று (5) செய்து கொண்ட 8 உடன்டிக்கைகளில், பாதுகாப்பு தொடர்பான உடன்படிக்கையில் இந்த 8 விமானங்களை இலங்கைக்கு விற்பனை செய்யும் விடயமும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவரை கோடிட்டு இலங்கையின் ஆங்கில இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விமானங்கள் தற்போது தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்களின் போது பாகிஸ்தானால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது

இந்தநிலையில் முன்னர் இந்த விமானங்கள், சீன தொழில்நுட்ப உதவியுடன் தயாரிக்கப்பட்ட போதும் தற்போது அவை தனித்து பாகிஸ்தானால் தயாரிக்கப்படுவதாக பாகிஸ்தானின் ஜியோ டிவி தெரிவித்துள்ளது

ஏற்கனவே இதனைவிட அதிக எண்ணிக்கையிலான விமானங்களை இலங்கை கொள்வனவு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த போதும், இந்தியா தமது போர் விமானங்களை கொள்வனவு செய்யவேண்டும் என்று அழுத்தம் காரணமாக அந்த எண்ணிக்கையில் குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது

அதேநேரம் இந்தியாவை திருப்திப்படுத்த இந்தியாவின் போர் விமானங்களையும் இலங்கை கொள்வனவு செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

By

Related Post